தமிழக அரசியலில் தடம் பதித்து, அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள முதல்வர் விஜய், இப்போது அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும் மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்க, தவெக-விற்கென ஒரு பிரத்யேக தொலைக்காட்சி சேனலைத் தொடங்கும் ‘மாஸ்டர் பிளானில்’ முதல்வர் விஜய் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் தங்களுக்கு ஆதரவான ஊடக பலம் என்பது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. திமுக-விற்கு ‘கலைஞர்’, அதிமுக-விற்கு ‘ஜெயா’, தேமுதிக-விற்கு ‘கேப்டன்’ என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். தன் அரசியல் நிலைப்பாடுகளை எவ்வித இடைத்தரகர்களும் இன்றி, எவ்விதத் திரிபுகளும் இன்றி மக்களிடம் கொண்டு செல்ல தனக்கென ஒரு சொந்த ஊடகம் வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார்.
ஒரு டி.வி. சேனல் தொடங்குவது என்பது சாதாரண காரியம் அல்ல. அதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அனுமதி, செயற்கைக்கோள் அலைவரிசை உரிமம் எனப் பல சட்டப்பூர்வ நடைமுறைகள் உள்ளன. இந்த வேலைகளைச் சரியாக முன்னெடுக்கத் தனது அமைச்சரவையின் முக்கிய முகமும், கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளருமான அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அரசியல் உத்திகளில் கைதேர்ந்தவரான ஆதவ் அர்ஜுனா, இதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் தற்போது தீவிரமாக இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், சட்டமன்றத்தின் மிக முக்கியமான பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. இதில் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்கான அறிவிப்புகளை வெளியிடுவதில் முதல்வர் விஜய் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த கையோடு, புதிய டி.வி. சேனல் தொடங்குவதற்கான உள்கட்டமைப்பு வேலைகள் மற்றும் லோகோ வெளியீடு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்தச் சேனல் வெறும் செய்திகளை மட்டும் சொல்லாமல், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கொள்கையைப் பரப்புவதற்கும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கும் ஒரு வலுவான தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து மிகக் குறுகிய காலத்தில் முதலமைச்சராக உயர்ந்த முதல்வர் விஜய், இப்போது ஊடகத் துறையிலும் தடம் பதிப்பதன் மூலம் தனது அரசியல் அடித்தளத்தை இன்னும் பலப்படுத்த நினைக்கிறார். முதல்வர் விஜய்யின் இந்த ‘டிஜிட்டல்’ அரசியல் நகர்வு மற்ற கட்சிகளுக்கு எந்த மாதிரியான சவால்களைக் கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
