IPL வரலாற்றில் இன்னும் கோப்பை வெல்லாத அணிகளாக பெங்களூரு, டெல்லி, பஞ்சாப், லக்னோ அணிகள் திகழ்கின்றன. இதில் லக்னோ தவிர்த்து மீதமுள்ள மூன்று அணிகளும், கடந்த 17 வருடங்களாக ‘கஜினி முஹம்மது’ போல, சற்றும் மனம் தளராமல் போராடிக் கொண்டிருக்கின்றன.
உலகின் தலைசிறந்த வீரரான விராட் கோலி இருந்தும் கூட, பெங்களூரு அணியால் இன்னும் தங்களின் முதல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது தான் சோகம். வருடாவருடம் ‘ஈ சாலா கப் நமதே’ என்ற கோஷம் மட்டும் தான் ஒலிக்கிறது.
மத்தபடி கோப்பை வெல்வதற்கான அறிகுறி ஒன்றும் தெரியவில்லை. என்றாலும் இந்த ஆண்டு அணியில் தரமான வீரர்கள் பலரும் இணைந்துள்ளதால், பெங்களூரு கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை ஏந்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தநிலையில் அந்த அணியின் எக்ஸ் வீரர் சதாப் ஜகாதி,” பெங்களூரு அணி நிர்வாகம் 2, 3 வீரர்களிடம் மட்டுமே கவனம் செலுத்தும். குறிப்பாக அந்த அணி விராட் கோலி மற்றும் வெளிநாட்டு வீரர்களையே அதிகம் நம்புகிறது. அணி என்ற அளவில் அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கிரிக்கெட்டை குழுவாக விளையாட வேண்டும். சென்னை அணி அப்படித்தான் விளையாடும். நான் பெங்களூரு அணியில் விளையாடியபோது 3,4 வீரர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், சென்னை அணி அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்.
பெங்களூரு அணியின் இந்த வியூகம் தான், அந்த அணி இன்னும் தங்களது முதல் கோப்பையை வெல்லாததற்கு முக்கியக் காரணம்,” என்று தெரிவித்து இருக்கிறார். அவரின் இந்த கருத்து தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில், ”ஆக இதத்தான் RCB காலம், காலமா பண்ணிட்டு இருக்கா? இந்த மாதிரி இருந்தா எப்படி கப்படிக்க முடியும்? இந்த வருஷமாச்சும் வின் பண்ணனும்னு நெனைச்சு விளையாடுங்க,” என்று விதம் விதமாக, அட்வைஸ் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் விராட் ஜெர்சி நம்பர் 18 என்பதால், இந்த 18வது ஆண்டில் RCB அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என்றும் ஆரூடங்கள் எழுந்துள்ளன.