பொதுவாகவே ஒவ்வொரு மாத துவக்கத்திலும் பல புதிய விதிகள் நடைமுறைக்கு வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக வரும் ஏப்ரல் மாத தொடக்கம் புதிய நிதி ஆண்டின் தொடகத்தை குறிக்கிறது. ஏப்ரல் 1 முதல் பல விதிகளில் மாற்றம் இருப்பதால் பல புதிய விதிகள் அமல்படுத்தப்படவிருக்கின்றன. இவற்றின் தாக்கம் கண்டிப்பாக அன்றாட வாழ்வில் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எல்பிஜி சிலிண்டர் விலை, Mobile Phone எண் புதுப்பிப்பு ஆகியவை தொடங்கி இன்னும் பல இதில் அடங்கும். ஏப்ரல் 1 முதல் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள் பற்றி விளக்குகிறது இந்த பதிவு.
ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எண்ணெய் நிறுவனங்கள் LPG சிலிண்டர் விலைகளை மாற்றியமைக்கின்றன. ஏப்ரல் 1, 2025 அன்று, வீட்டு உபயோக மற்றும் வணிக LPG சிலிண்டர்களுக்கான புதிய விலைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 2025 க்கான DA உயர்வு பற்றிய அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை 2% அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அதாவது UPS அமலுக்கு வரும்.
மட்டுமல்லாமல் ஏப்ரல் 1 முதல், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் இப்போது தங்கள் கடனில் 60 சதவீதத்தை முன்னுரிமைத் துறைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற நடைமுறையால் கடன் பெறும் அதிகமான பெண்கள் முந்தைய கட்டுப்பாடுகள் இல்லாமல் கடன் பெற தகுதி பெறுவார்கள்.
ஏப்ரல் 1 முதல், நீங்கள் வீட்டுக் கடன் வாங்கும் பட்சத்தில் முன்னுரிமைத் துறைக் கடனின் கீழ் பெரிய நகரங்களில் ரூ.50 லட்சம் வரையிலும், நடுத்தர நகரங்களில் ரூ.45 லட்சம் வரையிலும், சிறிய நகரங்களில் ரூ.35 லட்சம் வரையிலும் கடன் வாங்க முடியும்.
மேலும் SBI, HDFC வங்கி, இந்தியன் வங்கி, IDBI வங்கி மற்றும் பஞ்சாப் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் தங்கள் FD வட்டி விகிதங்களை திருத்தி அமைக்கின்றன.
ஏப்ரல் 1 முதல், பயனர்கள் தங்கள் மொபைல் எண்களைப் புதுப்பிக்காத பட்சத்தில் வங்கிச் சேவைகளுக்கான அணுகலை இழக்கலாம். தங்கள் மொபைல் எண்ணை மாற்றி, அதை தங்கள் வங்கியில் UPDATE செய்யாதவர்கள், தங்கள் வங்கிக்குத் தெரிவிக்காமல் தங்கள் எண்ணை செயலிழக்கச் செய்தவர்கள், பழைய எண்கள் வேறொருவருக்கு ஒதுக்கப்பட்ட UPI பயனாளர்கள் ஆகியவர்களுக்கு இது முக்கியமானது. அழைப்புகள், செய்திகள் அல்லது பிற சேவைகளுக்குப் பயன்படுத்தப்படாத செயலற்ற எண்களும் அகற்றப்படும்.
வருமான வரி விலக்குகள், TDS, வருமான வரி தாக்கல் உட்பட, வருமான வரி தொடர்பான பல அம்சங்களில் மாற்றம் இருக்கும்.
இந்த விதி மாற்றங்கள் பற்றிய புரிதல் அனைவருக்கும் இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் இதன் மூலம் தேவையற்ற சிக்கலைகளை தவிர்க்கலாம்.