வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்! RBI-ன் அதிரடி புதிய விதிமுறை!

வீட்டுக் கடன் வாங்குவதற்காக நீங்கள் எப்போதாவது வங்கிக்குச் சென்று, இறுதியில் நீங்கள் கேட்காத ஒரு காப்பீட்டுத் திட்டத்துடன் அதாவது இன்சூரன்ஸ் பாலிசியுடன் திரும்பி வந்திருக்கிறீர்களா? அல்லது ஒரு வங்கியின் செயலியைப் பயன்படுத்தும்போது, தனிநபர் கடனுக்கான விளம்பரங்களில் சிக்கித் தவித்திருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியைத் தரும்.

இனிமேல் வீட்டுக் கடன் பெறுவதற்கு இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமில்லை என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் காப்பீடு உள்ளிட்ட பிற நிதித் தயாரிப்புகளைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதைத் தடுக்க, ‘பொறுப்பான வணிக நடத்தை 2026’ என்ற புதிய விதிமுறைகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.

பொதுவாக, ஒருவருக்கு வீட்டுக் கடன் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றால், வங்கிகள் தங்களுடன் இணைந்த காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகளை எடுக்குமாறு வாடிக்கையாளர்களை வற்புறுத்தி வந்தன. இந்த ‘கட்டாய இணைப்புச் சலுகை’ முறைக்கு ரிசர்வ் வங்கி தற்போது முழுமையாகத் தடை விதித்துள்ளது.

ஒருவேளை கடனுக்காகக் காப்பீடு தேவை என்று வாடிக்கையாளர் கருதினால் கூட, அவர் தனக்குப் பிடித்தமான எந்த ஒரு நிறுவனத்திலிருந்தும் காப்பீட்டை வாங்கிக்கொள்ளலாம். குறிப்பிட்ட வங்கியின் காப்பீட்டைத்தான் எடுக்க வேண்டும் என்று எந்த வங்கியும் இனி வற்புறுத்தக் கூடாது. காப்பீடு எடுப்பதும் எடுக்காததும் முற்றிலும் வாடிக்கையாளரின் விருப்பம் சார்ந்த ஒன்று என்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது.

அதேபோல், உங்களது வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றும்போது, அதாவது லோன் டிரான்ஸ்பர் செய்யும் போது, பழைய காப்பீட்டை நிராகரித்துவிட்டுப் புதிய காப்பீடு எடுக்க வேண்டும் என்று இனி எந்த வங்கியும் கட்டாயப்படுத்த முடியாது. உங்களது தற்போதைய காப்பீட்டிலேயே புதிய வங்கியின் பெயரைச் சேர்த்து அதையே தடையின்றித் தொடரலாம்.

மேலும், தவறான தகவல்களைக் கூறி அல்லது மறைத்து ஒரு காப்பீட்டை விற்பனை செய்வது ‘தவறான விற்பனை’ அல்லது ‘மிஸ் செல்லிங்’ என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இது நிரூபிக்கப்பட்டால், வாடிக்கையாளர் செலுத்திய முழுத் தொகையையும் வங்கி வட்டியுடன் திருப்பித் தருவதோடு, அவருக்கு ஏற்பட்ட இழப்பிற்கு உரிய நஷ்டஈடும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கிகளில் காப்பீடு விற்பனைக்காக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை முறையையும் ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் தங்களது டார்கெட்டிற்காக வாடிக்கையாளர்களை வற்புறுத்துவது இனி குறையும். மிக முக்கியமாக, வாடிக்கையாளரின் தெளிவான ஒப்புதல் அல்லது ஓடிபி மற்றும் கையொப்பம் இல்லாமல் எந்தவொரு புதிய திட்டத்தையும் வங்கிகள் விற்கக் கூடாது.

இந்த புதிய அதிரடி விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளன. வங்கிகளின் கெடுபிடிகளால் அவதிப்பட்டு வந்த சாமானிய மக்களுக்கு, ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாக அமையப்போகிறது.

Related News

Latest News