காசா மீதான பாலஸ்தீன ஆயுதக் குழு, தனது கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 80% பகுதிகளை இழந்துவிட்டதாகவும், ஆயுதம் ஏந்திய குழுக்கள் காலி இடங்களை நிரப்புவதாகவும் ஹமாஸின் பாதுகாப்புப் படைகளின் மூத்த அதிகாரி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல மாதங்களாக இஸ்ரேலிய தாக்குதல்கள் காஸாவில் தொடர்ந்து வருகின்றன. அந்த தாக்குதல்கள் அரசியல், இராணுவ மற்றும் பாதுகாப்புத் தலைமையை நிலைகுலைய செய்துவிட்டன. இதனால் ஹமாஸின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் சீர்குலைந்துவிட்டதாக லெஃப்டினன்ட் கர்னல் கூறியிருக்கிறார்.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பிறகு தொடங்கிய போரின் முதல் வாரத்திலேயே அந்த அதிகாரி காயமடைந்தார். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக தனது கடமைகளில் இருந்து விலகி இருந்தார். ‘இங்கே உட்கட்டமைப்பாக இருக்கட்டும் அல்லது பாதுகாப்பு கட்டமைப்பாக இருக்கட்டும் எதுவும் மிஞ்சவில்லை. பெரும்பாலான தலைமைகள் அதாவது சுமார் 95% பேர் தற்போது இறந்துவிட்டார்கள். முழுவீச்சில் செயல்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்,” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இஸ்ரேல், ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு தூதுக்குழுவை கத்தாருக்கு அனுப்பும் என்பதை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் உறுதிப்படுத்தியது. இஸ்ரேல் ஹமாஸ் மோதலை தடுக்க கத்தார், அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் சமரச முயற்சிகள் செய்தன. ஆனாலும் போர் நிறுத்த திட்டத்தில் ஹமாஸ் “ஏற்றுக்கொள்ள முடியாத” மாற்றங்களை செய்துள்ளதாக தெரிகிறது. இருந்தபோதிலும் நெதன்யாகு இந்த முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.