முகூர்த்ததுக்கு முந்தைய தினம் பேச்சுலர்ஸ் பார்ட்டி கொடுக்கும் இளைஞர் சிலருக்கு எச்சரிக்கை தரும் விதமாக அமைந்துள்ளது பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம்.
‘படிச்சுப் பாத்தேன் ஏறவில்லை. குடிச்சுப் பாத்தேன் ஏறிடுச்சு‘ என்ற பாடல் ஒன்றில் நண்பனின் சகோதரி திருமணத்தில் குடித்துவிட்டு கலாட்டா செய்வார் தனுஷ். அப்படி ஒரு கலாட்டாவை முகூர்த்த நேரத்தில் செய்து மாப்பிள்ளையே அதகளப்படுத்தியிருக்கிறார்.
முகூர்த்தத்துக்கு மாப்பிள்ளையை வரவேற்பதற்காக ஆரத்தித் தட்டைப் பற்ற வைத்து நீட்ட, ஃபுல் போதையில் இருந்த மாப்பிள்ளையோ, ‘எவன்டா அவன், என்னைக் கேட்கோம பட்டாசக் கொளுத்தி விளையாடுறது‘ என்ற பாணியில் ஆரத்தித் தட்டையே தட்டிவிட்டிருக்கிறார்.
கால் தரையில் நிற்காமல் தள்ளாடிய மாப்பிள்ளையை உறவுக்காரர்கள் தாங்கிப் பிடித்து ஸ்டெடியாக நிற்க வைத்திருக்கின்றனர்.
இதைக் கண்டு அதிர்ந்து போன மணமகளின் தாய், அவமானத்தை விட மகளின் வாழ்க்கையே பெரிது எனக் கருதி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அதிரடி முடிவையும் எடுத்து விட்டார்.
திருமணத்துக்கு வந்திருந்த கூட்டத்தினரை நோக்கி கையெடுத்து கும்பிட்டு ‘வந்தவர்களுக்கு வணக்கம், ஆனால் மன்னிக்கவும். இந்தத் திருமணம் நடைபெறாது. என் மகளின் திருமணத்தை நானே நிறுத்துகிறேன்‘ என பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.
மாப்பிள்ளை வீட்டார் சமாதானம் செய்ய முயன்றும் அவர் கேட்கவில்லை.
‘திருமணத்தன்றே குடிபோதையில் இவ்ளோ தகராறு செய்கிறாரே, நாளை என் மகளின் எதிர்காலம் என்னவாகும்? வாழ்க்கை முழுக்க குடிகாரனோடு போராட வேண்டுமா?‘ என்ற நியாயமான கேள்வியைக் கேட்டதும் மாப்பிள்ளை வீட்டாரும் சமாதானம் செய்வதை நிறுத்திவிட்டனர்.
இதையடுத்து மீண்டும் கையெடுத்துக் கும்பிட்ட மணமகளின் தாய், அனைவரிடமும் ‘ஆள விடுங்க‘ என சொல்லும் வகையில் மன்னிப்புக் கேட்டு நகர்ந்துவிட்டார்.
பொதுவாக திருமணம் நின்றுபோனால், மணமகளின் குடும்பத்தினரும், மணமகளும் இச்சமூகத்தில் ஏராளமான அவச் சொல்களுக்கு ஆளாக வேண்டும். வாழ்வில் ஒருமுறை நடைபெறும் திருமணத்தில் லட்சங்களைக் கொட்டி, மணமேடை ஏறிய பின்பு, திருமணம் நின்றுபோவது ஒரு பெண்ணுக்கு சாதாரண சம்பவமில்லை.
மணமகனின் அதீத குடிப்பழக்கத்தால், தான் ‘பார்த்துப் பார்த்து வளர்த்தெடுத்த மகளின் எதிர்காலமே பாழாய் போய்விடும்‘ என அஞ்சி திருமணத்தையே நிறுத்திவிட்டார் அவர்.
சமூகம், நிதி நெருக்கடி, அவமானங்கள் எல்லாம் சில காலத்தில் முடிந்துவிடும்.
ஆனால், இவை அனைத்தையும் விட தனது மகளின் நல்வாழ்க்கைதான் மிகவும் பெரியது என மணமகளின் தாயே இப்படி ஒரு முடிவை தைரியமாக எடுத்திருப்பது சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.