Sunday, December 28, 2025

குளிர்காலத்தில் தண்ணி குடிக்க தோணலையா? இந்த பிரச்சனை வருவது உறுதி..!

பொதுவாக வெயில் காலத்தில் தாகம் அதிகமாக இருப்பதால், நாம் அதிகளவில் தண்ணீரை குடிப்போம். ஆனால் குளிர்காலம் வந்துவிட்டால் வியர்வை குறையும், தாகமும் பெரிதாக எடுக்காது. இதனால் பலர் மிகக் குறைவான அளவில் தண்ணீரை குடிப்பார்கள்.

இந்தச் சிறிய அலட்சியம், உடலுக்குள் பெரிய ஆரோக்கியப் பிரச்சனையை உருவாக்குகிறது என்பதை பலர் உணர்வதில்லை. அதுதான் சிறுநீரகக் கற்கள். குறிப்பாக பனிக்காலத்தில் இந்தப் பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது.

கற்கள் ஏன் உருவாகின்றன?

நாம் தண்ணீர் குடிப்பதை குறைத்தால், வெளியேற வேண்டிய கழிவுகள் சிறுநீரகத்திலேயே தேங்கிவிடும். ஆற்றில் தண்ணீர் வறண்டு போனால் மணல் திட்டுக்கள் உருவாகுவது போல, தண்ணீர் குறைந்தால் இந்த உப்புகள் ஒன்றாக சேர்ந்து கடினமான கற்களாக மாறிவிடுகின்றன. இதுவே பின்னாளில் கடும் வலியை ஏற்படுத்துகிறது.

அறிகுறிகள் என்ன?

சிறுநீரகக் கல் ஆரம்பத்தில் பெரிதாக அறிகுறிகளை காட்டாது. ஆனால் கல் நகரும் போது கடுமையான வலி ஏற்படும். இடுப்புக்கு மேலே, விலா எலும்புக்குக் கீழே திடீரென தீவிரமான வலி தோன்றி, அது முன்பக்கம் அடிவயிறு வரை பரவலாம்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் அல்லது வலி இருக்கும். சில நேரங்களில் சிறுநீர் இளஞ்சிவப்பு நிறமாகவோ அல்லது நுரை தள்ளியவாறோ வெளியேறலாம். தொடர்ச்சியான முதுகு வலியுடன் குமட்டல் அல்லது வாந்தி உணர்வு ஏற்படலாம்.

இந்த அறிகுறிகள் தோன்றினால், உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

தடுக்கும் வழிகள் என்ன?

தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிப்பேன் என்று இருக்காமல் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர்** குடிக்க வேண்டும் என்று இலக்கு வைத்துக்கொள்ளுங்கள். குளிர்ந்த நீர் குடிக்க சிரமமாக இருந்தால், வெதுவெதுப்பான சுடுதண்ணீர் குடிக்கலாம்.

ஊறுகாய், கருவாடு, சிப்ஸ், பாக்கெட் உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக உப்பு, சிறுநீரில் கால்சியத்தை அதிகரித்து கற்கள் உருவாக காரணமாகிறது.

டீ, காபி அதிகமாக குடிப்பதற்கு பதிலாக, புதினா டீ, செம்பருத்தி டீ அல்லது சீரகத் தண்ணீர் குடிப்பது உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவும். சரியான பழக்கங்கள் இருந்தாலே, சிறுநீரகக் கற்கள் போன்ற பெரிய பிரச்சனைகளை எளிதாகத் தவிர்க்கலாம்.

Related News

Latest News