Saturday, July 12, 2025

உங்களுக்கு ‘பிரிக்ஸ்” கரன்சி கேக்குதா? இந்தியாவுக்கு 500%, சீனாவுக்கு 300% டிரம்பின் ‘வரி’ விளையாட்டால் ஷாக்

டாலருக்கு எதிராக பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து சதி செய்வதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்கு பதிலடியாக மற்ற நாடுகளின் பொருட்களுக்கு எக்கச்சக்க இறக்குமதி வரியை விதித்து, உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சீன இறக்குமதி பொருட்களுக்கு, 300 சதவீதம் வரிவிதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு எக்கச்சக்க வரி விதித்து திருப்பி அடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் 90 நாட்களுக்கு சீன பொருட்கள் மீதான வரியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

இது ஜூலை 9ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. தற்போது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் மீதான வரிவிதிப்பினை ஆகஸ்ட் 1ம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளார். அதாவது மேற்கண்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இதில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வரிகளை வைத்து அந்த நாடுகளை அச்சுறுத்தலாம் என்பது டிரம்பின் திட்டம்.

இதில் இந்தியாவும் டிரம்பின் முக்கிய டார்கெட்டாக இருக்கிறது. இதனால் தான் இந்தியா மீது 500 சதவீத வரியை விதிக்கும், அமெரிக்காவின் செனட் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இந்தநிலையில் இலங்கை, அல்ஜீரியா, லிபியா, ஈராக் நாடுகளுக்கு 30 சதவீதம் இறக்குமதி வரியை விதிப்பதாக, டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதேபோல பிரேசில் நாட்டு இறக்குமதி பொருட்களுக்கு, ஆகஸ்ட் 1 முதல் 50 சதவீதம் வரி விதித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிற்கு, டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மாநாட்டில், ” நமக்கு உலக பேரரசர் வேண்டாம். டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சியை உருவாக்குவோம்,” என பிரேசில் அதிபர், டிரம்பை தாக்கி பேசியிருந்தார்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தற்போது டிரம்ப் பிரேசில் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கு பிரேசில் உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எதிர்வினை என்னவாக இருக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news