இந்தியாவில் சுமார் 14 சதவீத மக்கள், அதாவது 20 கோடி பேர் அளவில் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மன அழுத்தத்தின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு லேசான அளவிலும், சிலருக்கு தீவிரமாகவும் இருக்கலாம். இந்த அறிகுறிகளை கவனமாக புரிந்துகொண்டால், மன அழுத்தம் தீவிரமாவதற்கு முன்பே அதை கண்டறிந்து சரிசெய்ய முடியும்.
திடீரென ஏற்படும் தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, அதிக பதற்றம், கவலை, எரிச்சலடைவது, எப்போதும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு, முகப்பரு தோன்றுதல் ஆகியவை மன அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
மேலும் அதிகமாக நகத்தை கடிப்பது, முடியின் நிறம் மாறுவது, எந்தத் தெளிவான காரணமும் இல்லாமல் உடல் எடை திடீரென கூடுவது அல்லது குறைவது, பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் மாதவிடாய் சீர்குலைவது, மறதி, செரிமானப் பிரச்சனைகள் போன்றவையும் மன அழுத்தத்தின் அடையாளங்களாக இருக்கலாம்.
இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. இவற்றில் சில அறிகுறிகள் இருந்தால்கூட அது மன அழுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது.
அதிகமான கோபம் அல்லது எரிச்சல், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை, குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை அதிகரித்தல் போன்றவை காணப்பட்டால், அது தீவிரமான மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
மன அழுத்தம் சிலருக்கு மாதக்கணக்கில் நீடிக்கலாம். இதை தீவிர மன அழுத்தம் என்று கூறலாம். மன அழுத்தம் அதிகமாக இருந்தால், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, மேலே கூறப்பட்ட அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் உடனடியாக மனநல ஆலோசகரையோ அல்லது மருத்துவரையோ அணுகுவது அவசியம். மருத்துவர் அறிவுறுத்தும் சிகிச்சையை முறையாகப் பெற வேண்டும்.
மன அழுத்தத்தை குறைக்க, உங்களை நீங்கள் எப்போதும் பிஸியாக வைத்துக்கொள்ள வேண்டும். கவனத்தைச் சிதைக்கும் விஷயங்களைத் தவிர்த்து, பிரச்சனைகளுக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
சமச்சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல் போன்றவை மன அழுத்தத்தை குறைக்க உதவும். யோகா மற்றும் சுவாசப் பயிற்சிகளும் மன அழுத்தத்தை குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
