தமிழக அரசியலில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரம், ஒரு புதிய சட்ட விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
முதல்வர் விஜய் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில், சமீபத்தில் மார்க்கண்டேயனை போலீசார் அவரது இல்லத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
அப்போது அவர் போலீசாரிடம், “நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர், என்னைச் சபாநாயகர் அனுமதி இல்லாமல் கைது செய்ய முடியாது” என்று ஆவேசமாக வாதிட்டதுடன், தனது கட்சியினரைப் பாதுகாப்புக்கு வருமாறு அழைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இதனால், ஒரு எம்.எல்.ஏ-வை கைது செய்ய உண்மையில் யாருடைய அனுமதி தேவை என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வது தொடர்பான விதிகள் குறித்துக் காவல்துறை உயர் அதிகாரிகள் தற்போது மிகத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளனர்.
அதன்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றவியல் வழக்கு அதாவது ‘கிரிமினல்’ புகார் இருக்கும் பட்சத்தில், அவரைக் கைது செய்யச் சபாநாயகரிடம் எவ்வித முன் அனுமதியும் பெற வேண்டிய அவசியமில்லை.
ஆனால், அவரைக் கைது செய்த பிறகு, அவர் எந்த வழக்கில், எந்தச் சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விபரத்தைச் சபாநாயகருக்குத் தபால் மூலமாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்பது மட்டுமே கட்டாயமான விதிமுறையாகும்.
ஒருவேளை சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவைக்குள் வைத்து ஒருவரைத் தூக்க வேண்டும் என்றால் மட்டுமே சபாநாயகரின் அனுமதி தேவைப்படும்.
மார்க்கண்டேயன் மீதான புகாரைப் பொறுத்தவரை, முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதற்காகக் கொலை மிரட்டல், அவதூறாகப் பேசுதல் மற்றும் மக்களிடையே பகை உணர்வைத் தூண்டுதல் ஆகிய மூன்று கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 10 மணி நேரத் தீவிர விசாரணைக்குப் பிறகு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இந்த அதிரடி நடவடிக்கையால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று ஒருவிதப் பதற்றமான சூழலே காணப்பட்டது.
இந்தக் கைது நடவடிக்கையின்போது திமுக அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் ஆகியோர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மார்க்கண்டேயனைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு ஆளுங்கட்சி அல்லாத ஆனால் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை இவ்வளவு வேகமாகப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது, அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியிருப்பதாக ஒரு தரப்பினரும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
