திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 55வது வார்டு முத்தையன் கோவில் வீதி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் முறையாக குப்பைகளை அகற்றாமல் இருப்பதாகவும், கோழி கழிவுகள் உள்ளிட்ட இறைச்சி கழிவுகள் இப்பகுதியில் கொட்டப்படுவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் அந்த வழியாக சென்ற போது, அப்பகுதி மக்கள் அவரிடம் தங்களது குறைகளை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட எம்எல்ஏ செல்வராஜ், பொதுமக்களுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், குப்பைகளை உடனடியாக அகற்றுவதாக எம்எல்ஏவிடம் உறுதி அளித்தனர். ஆனால் அதனால் திருப்தியடையாத எம்எல்ஏ செல்வராஜ், மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலரின் கையைப் பிடித்து அழைத்து சென்று குப்பைக்குள் நிற்க வைத்து, “இதுதான் நீங்கள் வேலை செய்யும் லட்சணமா?” என கடுமையாக கேள்வி எழுப்பினார்.
மேலும், பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இருப்பது ஏன் என்று அதிகாரிகளை கடுமையாக கண்டித்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
