திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் பட்டியலின அதிகாரியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக நகரமன்ற உறுப்பினர் மற்றும் நகரமன்ற தலைவரின் கணவர் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியலின சமூகத்தைச்சேர்ந்த முனியப்பன் பணியாற்றி வருகிறார். இவரிடம் 20-வது வார்டு பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக திமுக உறுப்பினர் ரம்யா கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே பேச்சுமோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், முனியப்பன் தன்னை தகாத வார்த்தைகளில் திட்டியதாக நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவரிடம் ரம்யா கூறியுள்ளார்.
நகராட்சி ஆணையாளர் இல்லாத நேரத்தில் அவரது அறைக்கு முனியப்பனை அழைத்த நகர மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன், உறுப்பினர் ரம்யாவிடம் மன்னிப்பு கேட்கும்படி கூறியுள்ளார். முனியப்பன் மன்னித்து விடுங்கள் என்று கூறியதை ஏற்க மறுத்த ரம்யா, காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனும் வற்புறுத்தியதால், நகராட்சி ஊழியர் முனியப்பன் ரம்யா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, அதிமுக, விசிக உறுப்பினர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.