25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மன அழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக இந்திய மனநல மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய சூழலில் மன அழுத்தம் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கு உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் ஆண்கள் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.
குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு செல்போன்களின் அதிகப்படியான பயன்பாடும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read : மனஅழுத்தம் போகணுமா? வார இறுதியில் இதை மட்டும் பண்ணுங்க போதும்..!
இந்த நிலையில், இந்திய மனநல மருத்துவ சங்கத்தின் 77-வது ஆண்டு தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மனநல மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளில் 34.6 சதவீதம் 14 வயதுக்கு முன்பே தொடங்குகின்றன. 48.4 சதவீதம் 18 வயதுக்குள் மற்றும் 62.5 சதவீதம் 25 வயதுக்குள் உருவாகின்றன. இவை கல்வி சாதனை, தொழில் முன்னேற்றம், மனித உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை பெரிதும் பாதிக்கின்றன.
2011 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களிடையே மன உளைச்சல் 101.7 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. மொத்த மன அழுத்த பிரச்சினைகளில் 60 சதவீதம் 35 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கிறது.
இதற்கு கல்வி அழுத்தம், வேலையின்மை, சமூகத் தனிமை, டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு, போதைப்பொருள் பழக்கம் மற்றும் தீர்க்கப்படாத உணர்ச்சி சார்ந்த வலிகள் ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
Also Read : தூக்கமே வரலையா? தூக்கத்தை தூண்டும் உணவுகள் இதோ..!
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களின் தற்கொலைக்கு மனநல பிரச்சினைகள் மூன்றாவது முக்கிய காரணமாக உள்ளன. இளைஞர்கள் எதிர்கொள்ளும் மனநல சவால்களை சமாளிக்க முடியாத நிலை தற்கொலைக்கு வழிவகுக்கிறது என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. இது தற்போது ஒரு பொதுச் சுகாதார அவசரநிலையாக மாறி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மன அழுத்த பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அவை நீண்ட கால நோய்களாக மாறி, வாழ்க்கை முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை அதிகரிக்கும் என்றும் இந்திய மனநல மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
