உணவு விநியோக தளங்களில் பணியாற்றும் GIG தொழிலாளர்களுக்கு அதாவது தற்காலிகமாக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணி செய்பவர்களுக்கு முறையான ஓய்வூதிய சலுகைகளை வழங்கும் வகையில் Zomato மற்றும் HDFC ஓய்வூதியம் இணைந்து புதிய முயற்சியை தொடங்கியுள்ளன. ‘NPS தள தொழிலாளர்கள் மாதிரி’ எனப்படும் இந்த திட்டத்தை, அக்டோபர் 1ம் தேதி ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நடத்திய நிகழ்வில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
நிதி ஆயோக் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, 2029-30 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் ஆன்லைன் தொழிலாளர்கள் 23.5 மில்லியன் வரை அதிகரிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய நிலையில், GIG தொழிலாளர்கள் ஓய்வூதியப் பலன்களை அறிந்து கொள்ளவும், அணுகவும் சிரமம் நிலவுகிறது. இதனால், ஓய்வூதிய சேமிப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த கூட்டாண்மை மூலம் Zomato-வில் பணியாற்றும் டெலிவரி பார்ட்னர்கள் சிறிய அளவில், ஆனால் முறைப்படி பங்களிப்புகளைச் செய்து, எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். ஓய்வுபெறும் காலத்தில் தொகுப்புத் தொகையும், மாதாந்திர ஓய்வூதியமும் இவர்களுக்கு கிடைக்கும். மேலும், வேலை இடமாற்றம் ஏற்பட்டாலும், அவர்களின் பலன்களை தொடர்ந்து எடுத்துச் செல்லும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், டிஜிட்டல் ஒருங்கிணைப்பின் மூலம், GIG தொழிலாளர்களின் தற்போதைய KYC அல்லது e-KYC விவரங்கள், அவர்களின் சம்மதத்துடன் பயன்படுத்தப்பட்டு, நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் உருவாக்கப்படும். இதனால் ஆன்போர்டிங் செயல்முறை எளிமையாகும்.
‘முறையான ஓய்வூதிய திட்டமிடல் கருவிகள் பலருக்கு எட்டாமல் இருக்கின்றன. இந்த புதிய மாதிரி, அவர்களை நீண்டகால நிதிப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரும்’ என்று HDFC ஓய்வூதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீராம் ஐயர் தெரிவித்துள்ளார்.