Tuesday, June 17, 2025

கேப்டன் ‘சர்ச்சை’ 3 ஆண்டுகளுக்கு பிறகு மவுனம் ‘கலைத்த’ CSK ஆல்ரவுண்டர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு IPL தொடரை 10வது இடத்தில் முடித்து, ரசிகர்களை தீராத வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பத்தில் ருதுராஜை கேப்டனாக அறிவித்து, பின்னர் தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக கடந்த 2022ம் ஆண்டிலும் ஒருமுறை இதுபோல, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக்கி பின்னர் அவரை நீக்கினர். அதன் பின்னர் தோனியே கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டார். என்றாலும் இப்போது போல அப்போதும், Play Off வாய்ப்பை சென்னை இழந்து வெளியேறியது.

இதனால் சென்னை அணிக்கும் ஜடேஜாவுக்கும் முட்டிக்கொண்டு விட்டதாக, தகவல்கள் காட்டுத்தீ வேகத்தில்  பரவின. பின்னர் 2023ம் ஆண்டு சென்னை அணி 5வது கோப்பையை உச்சிமுகர, ஜடேஜாவே முக்கிய பங்காற்றினார் என்பதால், அந்த சர்ச்சையும் அத்துடன் நீர்த்துப் போனது.

இந்தநிலையில், அப்போது கேப்டன் விஷயத்தில் என்ன நடந்தது? என்று ஜடேஜா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அஸ்வினின் Youtube சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ” கேப்டனாக எனக்கு அது ஒரு அனுபவம். T20 கிரிக்கெட்டைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு பந்துமே முக்கியம்.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் எல்லாமே சிறப்பாக இருக்க வேண்டும். அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் உங்களால் வெற்றிபெற முடியாது. அதேநேரம் தோல்வி அடைந்தால் கேப்டன் மீதுதான் மொத்த பழியும் விழுகிறது. பேட்டிங் ஆர்டரை நேரத்துக்கு தகுந்தாற்போல மாற்றி அமைப்பதும் முக்கியமாகும்.

சில நேரங்களில் சாதாரண விஷயங்களும் வேலை செய்யும். நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டால், எல்லாமே நன்றாகத் தெரிகிறது, ” என்று ஓபனாக தெரிவித்துள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஜடேஜா இந்த கேப்டன் சர்ச்சை குறித்து, மனந்திறந்து பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news