பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன்,சிறு வயதிலிருந்தே அரசியல் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தமிழ்நாட்டில் பாஜக என்ற கட்சி குறித்து பலரும் அறிந்திராத காலகட்டத்திலேயே, அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, இங்கு மாபெரும் கட்சிகளில் ஒன்றான திமுகவை மக்களவைத் தேர்தலில் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனக்கென தனியிடத்தை பிடித்தார்.
அக்டோபர் 20, 1957 அன்று பிறந்த ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். RSS இயக்கத்தில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1974-ம் ஆண்டு பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
1996-ம் ஆண்டில் தமிழக பாஜக செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 1998, 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவையில் இருந்து இருமுறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக இருந்தார்.மேலும் பாஜக தலைவராக இருந்த காலத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.
பல்வேறு நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினராகவும், துணிநூல் தொடர்பான நிலைக் குழுவின் தலைவராகவும் இருந்தாக தெரிகிறது. பாஜக தேசிய செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் என உள்பட பல பதவிகளும் இருந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முதல் மகாராஷ்டிர ஆளுநராக தற்போது வரை பதவி வகித்து வருகிறார்.
சமீபத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்கு பின்னர், ‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் அரசியல் வாழ்க்கையை தாண்டி, ராதாகிருஷ்ணன் கல்லூரி காலத்தில் டேபிள் டென்னிஸில் சாம்பியனாகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்தமான விளையாட்டுகள் என்றும் சொல்லப்படுகிறது. ஓட்டப்பந்தய வீரராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனின் அரசியல் ஓட்டம் குடியரசு துணைத் தலைவர் பதவியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.