15 நாய்களைத் தத்தெடுத்த தம்பதி

476
Advertisement

கொரோனா தொற்றுப் பயத்தில் தங்கள் செல்லப் பிராணியைக் கொன்றதால், ஒரு தம்பதி 15 நாய்களைத் தத்தெடுத்த சம்பவம் மனதை உருக வைத்துள்ளது.

வியன்னாவைச் சேர்ந்த ஃபாமின் ஹங்- நூயென் தி சி யெம் என்னும் தம்பதி இருவரும் தாங்கள் பணியாற்றி வரும் லாங் ஆன் மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அங்கிருந்து வேறிடம் செல்ல முடிவுசெய்தனர். இதற்காகத் தொலைவிலுள்ள கா மாவ் மாகாணத்தில் அமைந்திருக்கும் தங்கள் வீட்டுக்குச் சென்றனர்.

அப்போது தாங்கள் வளர்த்துவந்த 12 செல்லப் பிராணிகளையும் அழைத்துச்சென்றனர். 280 கிலோ மீட்டர் தொலைவு பயணித்த நிலையில், அங்கிருந்த சுகாதார அதிகாரிகள் தம்பதியர் இருவரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அவர்களுக்கு கோவிட் 19 தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதேசமயம் அவர்களின் 12 செல்லப்பிராணிகளும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் விடப்பட்டன.

பின்னர், தம்பதிகள் இருவரும் சிகிச்சைமுடிந்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, தங்களின் செல்லப்பிராணிகளை அதிகாரிகள் கொன்றுவிட்டதை அறிந்து துயரத்தில் ஆழ்ந்தனர். கடுங்கோபத்தில் அதிகாரிகளைத் திட்டித் தீர்த்தனர்.

விரக்தியோடு அழுது புலம்பிய அந்தத் தம்பதியினர் விரைவாக நாய் இறைச்சிக் கடைக்குச் சென்றனர். அங்கிருந்த 15 நாய்களை மீட்டுவந்து தங்களின் தத்துப்பிள்ளைகளாக வளர்க்கத் தொடங்கினர்.

இதுபற்றிக்கூறியுள்ள ஃபாமின் ஹங், எனது செல்லப்பிராணிகள் கொல்லப்பட்டதை அறிந்து விரக்தியடைந்து அழுதேன். இப்போது 15 புதிய குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளேன். அவர்களை மிகவும் நேசிக்கிறேன் என்று உள்ளம் பூரிக்கிறார்.
வலைத்தளவாசிகள் ஃபாமின் தம்பதியைப் பாராட்டு மழையால் குளிர்வித்து வருகின்றனர்.