புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், புதிய விலையேற்றம் அமலுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சில கடைகளில் சிகரெட் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. முன்பு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட கோல்டு பில்டர் சிகரெட்டுகள் தற்போது ரூ.12-க்கு விற்கப்படுகின்றன.
அதேபோல, கிங்ஸ் ரூ.20, சிசர் பில்டர் ரூ.10 என ஒரு சிகரெட்டுக்கு 2 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக விலை உயர்த்தப்படவில்லை என்றும், சில வியாபாரிகள் சிகரெட்டுகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விலையேற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதற்கு முன்பே சிகரெட் விலை உயர்ந்துள்ளதால், தமிழ்நாட்டில் புகைப்பிடிப்பவர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
