முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்! ‘INDIA’ கூட்டணிக்கு ‘நோ’ சொன்ன பின்னணி!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருப்பது தமிழக முதல்வர் விஜய்யின் அதிரடி அரசியல் நகர்வுதான். தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ கூட்டணியில், இப்போதைக்கு இணையப்போவதில்லை என்ற மிக முக்கியமான முடிவை தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான விஜய் எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இதன் பின்னணியில் இருக்கும் வியூகங்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ கூட்டணியில், தி.மு.க ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்தது. ஆனால், தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தின் அரசியல் சூழல் தலைகீழாக மாறியிருக்கிறது.

தி.மு.க கூட்டணியில் நீண்டகாலமாகப் பயணித்த பல கட்சிகள், அந்த முகாமிலிருந்து வெளியேறி தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி தி.மு.க கூட்டணியை விட்டு விலகி,முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் பங்கேற்றது தி.மு.க தலைமைக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாகவே, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தை தி.மு.க புறக்கணித்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும், தேசிய அரசியலில் இப்போதே நேரடியாகக் களம் இறங்க விஜய் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே தற்போதைய முதன்மை இலக்காக அவர் கொண்டுள்ளார்.

குறிப்பாக, வரும் 2029-ஆம் ஆண்டு வரை மத்திய அரசுடன் ஒரு இணக்கமான உறவைப் பேணி, தமிழகத்திற்குத் தேவையான நிதி ஆதாரங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் தடையின்றிப் பெறுவதே அவரது திட்டமாக உள்ளது. மத்திய அரசுடன் இப்போதே அரசியல் மோதலில் ஈடுபடுவது மாநில நலனைப் பாதிக்கும் என்பதால், 2029 மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் மட்டும் பா.ஜ.க-விற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டைத் தீவிரப்படுத்த அவர் முடிவெடுத்துள்ளார்.

தேசிய அரசியலில் ‘இந்தியா’ கூட்டணிக்கு இப்போதே பலம் சேர்க்க அவர் விரும்பவில்லை என்றாலும், கூட்டணிக் கட்சிகளுடனான உறவை மாநில அளவில் அவர் மிக வலுவாகக் கையாண்டு வருகிறார். அதற்குச் சான்றாக, தனது கட்சிக்குக் கிடைத்த முதல் ராஜ்யசபா இடத்தைக் காங்கிரஸ் கட்சிக்கு அவர் விட்டுக்கொடுத்துள்ளார்.

மேலும், விரைவில் தமிழக அளவில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய பெயரில் கூட்டணியை அறிவிக்கவும் முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய இரு தரப்பினரையும் எதிர்கொள்ளும் வகையில் முதல்வர் விஜய் வகுத்துள்ள இந்தத் தனித்துவமான அரசியல் வியூகம், வரும் காலங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News