சென்னையின் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்தாக, லோக்கல் டிரெயின்கள் உள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ஆகிய வழித்தடங்களுக்கும் புறநகர் டிரெயின்கள் இயக்கப்படுகின்றன.
அதிகாலை 4 மணியில் ஆரம்பித்து இரவு 12 மணி வரையிலும் இந்த டிரெயின்கள் இயக்கப் படுவதால், பயணிகள் சிரமமின்றி பணிகளுக்குச் சென்று வீடு திரும்புகின்றனர். இதில் குறைந்தபட்ச கட்டணமே 5 ரூபாய் தான் என்பதால், பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இந்த போக்குவரத்து உள்ளது.
இந்தநிலையில் புறநகர் டிரெயினில் பயணிக்கும் அனுபவத்தை, தற்போது அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி ஆலையில் ஏசி டிரெயின் தயாரிக்கப்பட்டு, அதன் முழு பணிகளும் நிறைவடைந்துள்ளன.
விரைவில் இதை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர். தற்போது அதற்கான அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தி இந்த டிரெயினை ஆய்வு செய்து வருகின்றனர். எந்த வழித்தடத்தில் இந்த டிரெயின் இயக்கப் படவுள்ளது என்பதை விரைவில் ரயில்வே வாரியம் அறிவிக்கும்.
அறிவிப்புக்கு பின்னர் டிரெயின் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும். ஏசி வசதி உள்ளதால் அதற்கேற்ப கட்டணம் உயர்த்தப்படுமா? இல்லை சாதாரண கட்டணத்திலேயே பயணம் செய்யலாமா? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. மொத்தத்தில் இந்த ஏசி டிரெயின் சென்னையின் பொது போக்குவரத்தை, நெக்ஸ்ட் லெவலுக்குக் கொண்டு செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.