சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய மேற்கு மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ உயரத்திலும், தெற்கு ஆந்திரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் 3.1 கி.மீ உயரத்திலும் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர், திருநெல்வேலி மலைப்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழக பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 17 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35–36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28–29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கையாக, இன்று முதல் 15 ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில், இடையிடையே 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
