நேபாளத்தில் இன்று மிகப் பெரிய அரசியல் அதிர்ச்சிக்கு பிறகு மெதுவாக இயல்பு நிலை திரும்புவதற்கான அறிகுறி தென்படுகிறது. சமூக ஊடகத் தடையை எதிர்த்து இளைஞர்கள் தொடங்கிய போராட்டம், மாபெரும் புரட்சியாக மாறி திரும்பும் திசையெல்லாம் பற்றி எரிந்தது. இது பிரதமர் K.P. சர்மா ஒலி ராஜினாமை செய்யும் நிலைக்கு தள்ளியது.
“Gen Zee Protest” என அழைக்கப்படும் இந்த இயக்கம், பெரும்பாலும் இளம் தலைமுறையினரால் முன்னெடுக்கப்பட்டது. அரசு Facebook, X தளம், YouTube போன்ற சமூக ஊடகங்களை தடை செய்ததும், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த கோபமும் மக்கள் மத்தியில் வெடித்தது. பாராளுமன்றம், நீதிமன்றம், அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 30 பேர் உயிரிழந்ததும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததும், இந்தப் புரட்சியின் தீவிரத்தைக் காட்டுகிறது.
நேபாளத்தின் இளம் தலைமுறை, அரசின் வெளிப்படையற்ற நடைமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது, உலக அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஊழலை தாங்க முடியாத மக்கள், தங்கள் கோபத்தை, ‘மாற்றம் வேண்டும்’ என்ற குரலாக மாற்றியுள்ளனர்.
நேபாளத்தில் ஹோட்டலில் தஞ்சமடைந்துள்ள தமிழர் ஒருவர் அங்கு வெளியே போக முடியாத நிலை உள்ளதாகவும் சாப்பாடு கூட கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார். இந்நிலையில் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க நேபாள இராணுவம் தலைநகர் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு சிக்கித் தவிக்கும் அனைத்து வெளிநாட்டினரும் அருகிலுள்ள பாதுகாப்புப் பணியாளர்களையோ அல்லது அவர்கள் தங்கியுள்ள ஹோட்டல்களையோ உதவிக்காகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க, முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி தயாராக இருப்பதாக தெரிவித்திருப்பது அமைதிக்கான நம்பிக்கையை தருகிறது.