தோல்வியடைவதற்காகவே போட்டியிடும் வேட்பாளர்

511
Advertisement

தேர்தலில் 93 முறை தோல்வியடைந்துள்ள வேட்பாளர் ஒருவர் 100 முறையாவது தோல்வியடைய வேண்டும் என்பதை உயர்ந்த லட்சியமாகக் கொண்டுள்ளார்.

விநோதமான அந்த வேட்பாளரைப் பற்றிப் பார்க்கலாம், வாங்க…

ஆக்ராவைச் சேர்ந்தவர் ஹஸ்னுராம். வருவாய்த் துறையில் கிளர்க் ஆகப்பணியாற்றி வந்தபோது இவருக்குத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற ஆசை எழுந்துள்ளது.
அதற்காக, 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஃபதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, ஒரு பெரிய அரசியல் கட்சியின் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அவருக்கு உறுதியளித்த அக்கட்சி, ஹஸ்னு ராமின் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு வருமாறு கூறியது.

அவரும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு கட்சி அலுவலகத்துக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் உங்களுக்கு ஒரு ஓட்டுகூட விழாது என்றுகூறி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால், வெறுத்துப்போன ஹஸ்னு ராம் சுயேட்சையாகப் போட்டியிட முடிவுசெய்தார்.

அன்றிலிருந்து, வார்டு கவுன்சிலர் முதல் எம்.பி., தேர்தல்வரை சுயேட்சையாகவே போட்டியிட்டு வருகிறார். இதுவரை 93 தேர்தல்களில் போட்டியிட்டுள்ள ஹஸ்னு ராம், அத்தனைத் தேர்தல்களிலும் தோல்வியையே தழுவியுள்ளார்.

ஆனாலும், அந்தத் தோல்விகளையெல்லாம் தனது சாதனையாகவே கருதுகிறார். இன்னும் 7 தேர்தலில் தோற்றால் தனது உயர்ந்த லட்சியத்தை அடைந்துவிடுவார் இந்த அபூர்வ லட்சிய மனிதர்.

தனது லட்சியத்தை நிறைவேற்ற சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.

75 வயதாகும் இந்த அபூர்வ சாதனை மனிதர், ஜனாதிபதி தேர்தலில் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை வேதனையோடு கூறுகிறார்.

தான் போட்டியிடும் தொகுதியில் அருகிலுள்ள வாக்காளர்களை நேரில் சந்தித்தும், தொலைவில் உள்ள வாக்காளர்களிடம் அஞ்சல் அட்டைமூலமும் பிரசாரம் செய்துவருகிறார்.

தற்போது விவசாயம் செய்துவரும் ஹஸ்னுராம் தனது சேமிப்பிலிருந்து தேர்தல் செலவு செய்துவருகிறார். இவரது லட்சியம் நிறைவேற அவரது மனைவியும் 5 மகன்களும் ஆதரவு தருகிறார்களாம்.