Monday, February 2, 2026

அதிக லாபம் கிடைக்கும்., ஆசை வார்த்தை கூறி தனியார் ஊழியரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த 54 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ஆன்லைன் முதலீட்டு மோசடியில் சிக்கி ரூ.20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகையை இழந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி, அவரது செல்போன் எண்ணை அறியாத நபர் ஒருவர் ‘வி.ஐ.பி. ஸ்ட்ரேடஜி’ என்ற பெயரில் இருந்த வாட்ஸ்-அப் குழுவில் இணைத்துள்ளார். அந்த குழுவில் ஆன்லைன் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

அதை நம்பிய அந்த நபர், முதலில் முதலீடு செய்த தொகைக்கு லாபம் கிடைத்ததால், மேலும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினார். இதனைத் தொடர்ந்து, அவர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.20 லட்சம் 17 ஆயிரத்து 459-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவருக்கு எந்த தகவலும் வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர், தன்னை வாட்ஸ்-அப் குழுவில் இணைத்திருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயன்ற போது, அந்த எண் சுவிட்ச்-ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News