காவு வாங்கும் கள்ளச்சாராயம்! டாஸ்மாக்கை மிஞ்சும் நஞ்சாக மாறுவது எப்படி?

105
Advertisement

மரக்காணம் பகுதி அருகே அரங்கேறி வரும் கள்ளச்சாராய மரங்கள் மாநிலத்தையே உலுக்கி வரும் நிலையில், டாஸ்மாக் கடையில் விற்பனையாகும் சாராயத்தை விட கள்ளச்சாராயம் உடனடி உயிர்கொல்லியாக மாறுவது எப்படி என்பதை இப்பதிவில் பார்ப்போம்.


மூலப்பொருட்களை ஊறல் போட்டு நொதிக்க வைத்து காய்ச்சி ஆவியாக்கி, ஆவியை குளிர்வித்து சொட்டு சொட்டாக சேகரிக்கப்பட்டு தான் நல்லசாராயம் , கள்ளச்சாராயம் இரண்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் எத்தனால் பல கட்ட தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நச்சுத்தன்மையை நீக்கிய பிறகே பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

ஆனால், மெத்தனால் கலந்து தயாரிக்கப்படும் கள்ளச்சாராயத்துக்கு எந்த விதமான தரப் பரிசோதனையோ வரைமுறையோ கிடையாது. சுவை, போதை மற்றும் வாசனைக்காக சேர்க்கப்படும் 100 மில்லி லிட்டர் மெத்தனால் கலந்த சாராயத்தை உட்கொண்டால் 12 மணி நேரத்திற்குள் உயிர் போகும் அபாயம் உள்ளது.


கள்ளச்சாராயத்தில் உள்ள மெத்தனால் உடலுக்குள் சென்ற பின் Formaldehyde ஆக மாறி பிறகு Formic acid ஆக இரத்தத்தில் கலக்கிறது. இந்த நச்சு செல்களின் ஆற்றல் மையமாக செயல்படும் மைட்டோ காண்ட்ரியாவில் உள்ள காக்ஸ் என்சைம்களை தாக்கி செல்கள் உயிர் வாழத் தேவையான மூலக்கூறாக இருக்கும் ATP உற்பத்தியை தடை செய்கிறது.


இதனால் மைட்டோகாண்ட்ரியா செயலிழப்பு ஏற்பட்டு இரத்தத்தில் உள்ள pH அளவு குறைந்து அமிலத்தன்மை அதிகரித்தது. இதைத் தொடர்ந்து அவசரமாக வெளியேற்றப்படும் ஆக்சிஜன் இதயத் தசை சுருங்கி விரிவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இதனால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்து மூளைச்சாவு ஏற்படுகிறது. சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து ஒருவேளை உயிர்பிழைத்தாலும் கூட, இரத்தத்தில் பரவிய ஃபார்மிக் அமிலம் கண்பார்வை நரம்பை துண்டிப்பதால் பார்வை இழப்பு அபாயம் அதிகம்.


2021ஆம் ஆண்டில் மட்டும் 782 பேர் கள்ளச்சாராய பயன்பாட்டினால் மரணம் அடைந்துள்ளனர். உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் பீகார்களில் ஆண்டுக்கு ஏறக்குறைய 1000 கள்ளச்சாராய இறப்புகள் பதிவாகின்றன. கள்ளச்சாராயத்திற்கு பலியானவர்களில் 30இல் இருந்து 45 வயதுக்குட்பட்டோர் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.