கழிப்பறையாக மாற்றப்படும் பேருந்துகள்

252
Advertisement

மகாராஷ்டிர மாநிலத்தில் பழைய பேருந்துகளைப் பெண்கள்
பயன்படுத்துவதற்கேற்ற வகையில் கழிப்பறையாக மாற்றப்பட்டுள்ளது
பெண்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

புனே நகரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நகரும் கழிப்பறைத்
திட்டமான இதற்கு ‘தி சுவச்சதாகிருஹா’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.

5 ரூபாய்க் கட்டணத்தில் இந்தக் கழிப்பறையைப் பெண்கள் பயன்படுத்திக்
கொள்ளலாம். புனே மஹாநகர் பரிவாகன் மஹாமண்டல் லிமிடெட் நிறுவனத்தின்
பழைய பேருந்துகளை வாங்கி இப்படி மாற்றப்பட்டுள்ளது. தற்போது புனே
நகர் முழுவதும் 12 பழைய பேருந்துகள் மொபைல் டாய்லெட்டுகளாக
சுற்றிவருகின்றன.

இந்தத் திட்டத்தை உல்கா சடல்கர், ராஜிவ் கர் ஆகிய இரண்டு தொழில்முனைவோர்
தொடங்கியுள்ளனர். இந்த மொபைல் டாய்லெட்டை இதுவரை ஒரு லட்சத்துக்கும்
அதிகமான பெண்கள் பயன்படுத்தியுள்ளனர்.

”இந்தத் திட்டத்துக்காக ஆயிரம் பழைய பேருந்துகளை வாங்கத் திட்டமிட்டுள்ளோம்.
சாலையோரத் தூய்மைப் பணியாளர்கள், பேருந்து, கார் ஆகியவற்றில் பயணிப்போருக்கு
இந்த மொபைல் டாய்லெட் நிம்மதியைத் தரும்” என்கிறார் உல்கா சடல்கர்.

சூரிய ஒளியால் இயங்கும் இந்தப் பேருந்துக்குள் நாப்கின் மற்றும் சுகாதாரம்
தொடர்பான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது என்பது சிறப்பம்சம்.
இதனால் பெண்கள் தயக்கமோ கூச்சமோ இல்லாமல் தங்கள் சுகாதாரத்தைப்
பேணுவதற்கான பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி ஆரோக்கியமாகவும்
நிம்மதியாகவும் இருக்கலாம்.

கழிப்பறையே இல்லாதவர்களுக்கும் பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்தத்
தயங்குவோருக்கும் இந்த பிங்க் நிற மொபைல் டாய்லெட் நிச்சயம் தயக்கத்தைப்
போக்கி நிம்மதியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பேருந்தின் மறுபகுதியில் டயபர் மாற்றும் அறை, தாய்ப்பால் ஊட்டும்
அறை, சிறிய கேன்டீன் ஆகியவையும் உள்ளன என்பது மற்றொரு சிறப்பம்சம்.

நகர்ப்புற நெருக்கடியால் போதிய கழிப்பறை இன்றி மலஜலத்தை அடக்கிப்
பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்கு இந்த மொபைல்
டாய்லெட் ஒரு நல்ல தீர்வு.