இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janata Party – CJP) பாணியில், வங்கதேசத்திலும் மாணவர்களால் ‘பிராய்லர் சிக்கன் பார்ட்டி’ (Broiler Chicken Party) என்ற நையாண்டி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதாக எழுந்த சர்ச்சைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகியான அபிஜித் தீப்கே ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற சமூக வலைத்தளப் பக்கத்தைத் தொடங்கினார்.
குறுகிய காலத்திலேயே இந்த இயக்கத்துக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் அதிகார வர்க்கத்திற்கு எதிரான நையாண்டி பதிவுகள், மீம்கள் மற்றும் அரசியல் விமர்சனங்கள் மூலம் இந்த இயக்கம் பரவலான கவனத்தைப் பெற்றது.
மேலும், நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் கல்வித் துறையில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கண்டித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், வங்கதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கால் பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்வி அமைச்சர் ஏ.என்.எம். எஹ்சானுல் ஹக் மிலோன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ‘பிராய்லர் கோழிகள்’ என விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் முகநூலில் ‘பிராய்லர் சிக்கன் பார்ட்டி’ என்ற பக்கத்தைத் தொடங்கி, அரசின் செயல்பாடுகளை நையாண்டி செய்யும் பதிவுகள் மற்றும் மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ இளைஞர்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே, வங்கதேசத்திலும் ‘பிராய்லர் சிக்கன் பார்ட்டி’ குறிப்பாக ‘ஜென்-ஸி’ தலைமுறையினரிடையே பெரிய வரவேற்பைப் பெறும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
