போட்டோகிராஃபர் இல்லாததால் திருமணத்தை ரத்துசெய்த மணப்பெண்

326
Advertisement

மறக்க முடியாத தருணங்களைப் படம்பிடிக்கப் புகைப்படக்காரர்
இல்லையென்பதை உணர்ந்த மணப்பெண் திருமணத்துக்கு மறுத்த
சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பரபரப்பான இந்த விநோத சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் டெஹாட்
மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அண்மையில் அரங்கேறியுள்ளது.

அந்தக் கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் மகளுக்கும் அருகிலுள்ள
கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணத்துக்கு ஏற்பாடாகி
இருந்தது. திருமணத்தன்று மணமகன் வீட்டார் திருமண ஊர்வலம் வந்து
விழா மேடைக்கு வந்தனர்.

அப்போது மணமகளின் கண்கள் யாரையோ தேடுவதுபோல் இருந்தது.
அனைவரும் தவிப்போடு ‘யாரையம்மா தேடுகிறாய்’ என்று கேட்க,
‘போட்டோஃகிராபரை’ என்றிருக்கிறார். அதற்கு மணமகன் வீட்டார்
போட்டோஃகிராபரை அழைத்துவர மறந்துவிட்டதாகச் சொல்லியுள்ளனர்.
அவ்வளவுதான்…கோபம் தலைக்கேறிய மணமகள், மணமேடையைவிட்டு
கீழிறங்கிச்சென்றுவிட்டார்.

உறவினர்கள் அந்தப் பெண்ணை எவ்வளவோ சமானதானப்படுத்த முயன்றும்
அதனை ஏற்கவில்லை. ”இன்றைய திருமண விழாவைப் பற்றியே அக்கறை
கொள்ளாதவர் வருங்காலத்தில் என்னை எப்படி அக்கறையோடு பார்த்துக்
கொள்வார்” என்று அதிரடியாகக் கேட்டு திருமணத்துக்கு மறுத்துவிட்டார்.

இந்த விவகாரம் காவல்நிலையத்துக்குச் சென்றது. அங்கு இருதரப்பினரும்
தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட பணம் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களைத்
திரும்பத் தர ஒப்புக்கொண்டனர். அத்துடன் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

மாப்பிள்ளை ஏமாற்றத்துடன் தனது சொந்தக் கிராமத்துக்குச் சென்றார்.