Monday, October 6, 2025

வங்கி மேலாளரிடம் பணமோசடி செய்த பாஜக நிர்வாகி கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கானை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (50). இவர், அரியலூரில் உள்ள ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு இணையத்தில் கிடைத்த விளம்பர இணைப்பு வழியாக, ஒரு இணையவழி வர்த்தக குழுவில் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்தக் குழுவின் செயலியில் முதலீடு செய்தால் 500 சதவீதம் வரை லாபம் பெறலாம் எனக் கூறப்பட்டது. இதை நம்பிய ராஜசேகர், செயலி மூலம் இணையவழி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில், அவருக்கு ரூபாய் 3.45 லட்சம் வருமானம் கிடைத்தது. இதனால், அதிக லாபம் ஈட்டும் ஆசையில் அவர்கள் வங்கிக் கணக்கிற்குப் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூபாய் 46.90 லட்சத்தைச் செலுத்தியுள்ளார்.

இதையடுத்து, அந்த செயலியில் அவருடைய கணக்கில் ரூபாய் 2.25 கோடி சேர்ந்திருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை எடுக்க முயன்றபோது, மோசடிக் கும்பல் 2 சதவீதம் சேவைக்கட்டணமாக ரூபாய் 50 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜசேகர், உடனடியாக 1930 என்ற இணையவழிக் குற்றப்பிரிவு உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த இணையவழிக் குற்றப்பிரிவு காவல்துறையினர், பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்கை ஆய்வு செய்தனர். விசாரணையில், அந்த வங்கிக் கணக்கின் உரிமையாளர் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை புதுப்பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த வேலு (31) என்பது தெரியவந்தது. இவர் திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இணையவழிக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இசைவாணி தலைமையிலான காவல்துறையினர், நேற்று வேலுவைக் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சம் ரொக்கம், 2 கைபேசிகள், வங்கி ஆவணங்கள் மற்றும் வங்கி அட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News