2023-24 நிதியாண்டில் பாஜக-வுக்கு 4 ஆயிரத்து 340 கோடி ரூபாயும், காங்கிரஸ் கட்சிக்கு ஆயிரத்து 225 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், தங்களுடைய தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு வரவு, செலவு கணக்கை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, 2023 – 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கை, பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.
அதன்படி, பாஜக-வின் ஆண்டு வருவாய் 83 சதவீதம் உயர்ந்து, கடந்த நிதியாண்டில் 4,340 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக மட்டும், ஆயிரத்து 685 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டில் பாஜக-வின் வருவாய், 2,360 கோடி ரூபாயாக இருந்தது. ஒட்டு மொத்தமாக 7,113 கோடியுடன், பாஜக பணக்கார கட்சியாக முதலிடத்தில் உள்ளது.
காங்கிரசின் வருவாய், 452 கோடி ரூபாயில் இருந்து, ஆயிரத்து 225 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 170 சதவீத உயர்வாகும். அதுபோல, தேர்தல் பத்திரங்கள் வாயிலான வருவாய், 171 கோடி ரூபாயில் இருந்து, 828 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 384 சதவீதஉயர்வாகும். பா.ஜ.க-வின் செலவு 62 சதவீதமாகவும், காங்கிரசின் செலவு 120 சதவீதமாகவும் உயர்ந்தது. செலவினங்கள் போக, காங்கிரஸ் வங்கி கணக்கில் 857 கோடி மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.