Wednesday, February 19, 2025

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போகி பண்டிகையை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

வேலூர் மாவட்டத்தில் வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை மக்கள் சாலையில் போட்டு எரித்தனர். வீட்டில் தேங்கியுள்ள பயனற்ற பொருட்களை அப்புறப்படுத்தி, சுத்தம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே எடையூர் கிராமத்தில் தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக, மக்கள் போகி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, பாய், போர்வை போன்ற துணிகளை எரித்து மாசை தவிர்த்தனர்.

திருப்பத்தூரில் புகையில்லா போகி பண்டிகையை சிறுவர்கள் கொண்டாடினர்.
மேளம் வாசித்து, கைகளை தட்டி போகியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

புதுச்சேரியில் உள்ள மக்களும், குளிரை பொருட்படுத்தாமல் போகியை கொண்டாடினர். சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்களை தவிர்த்து துணிகள் மற்றும் மர பொருட்களை எரித்தனர். கோபம் மற்றும் வெறுப்புகளை ஒழித்து புதிதாக மாற வேண்டும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Latest news