மாணவர்களே கவனம்.. கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!! முழு விவரம் இதோ…

மாணவர்களின் உயர்கல்வி கனவை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EBC) மற்றும் சீர்மரபினர் (DNT) மாணவர்களுக்காக பிரதமமந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2026-27ஆம் கல்வியாண்டில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 100 சதவீத தேர்ச்சி பெற்ற சிறப்பாக செயல்படும் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.75,000 வரையும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரையும் உதவித்தொகை வழங்கப்படும். இதில் 30 சதவீத இடங்கள் மாணவியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க மாணவர்கள் OBC, EBC அல்லது DNT பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

2025-26ஆம் ஆண்டில் உதவித்தொகை பெற்ற மாணவர்கள் 2026-27ஆம் ஆண்டுக்கான புதுப்பித்தல் விண்ணப்பத்தை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சரிபார்க்க வேண்டும். புதிய விண்ணப்பத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தகுதியுள்ள மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Related News

Latest News