LPG கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களே கவனம்…

வீட்டில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் தங்களது எல்பிஜி இணைப்புக்கான இ-கேஒய்சியை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவகாசம் வழங்கப்பட வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

இ-கேஒய்சி முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக இணைப்பு ரத்து செய்யப்படாது என்றாலும், தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதுடன், தகுதியானவர்களுக்கு கிடைக்கும் மானியமும் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.

வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் இ-கேஒய்சியை முடிக்கலாம். இதற்கு ஆதார் அட்டை, எரிவாயு இணைப்புடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், எல்பிஜி நுகர்வோர் எண் மற்றும் எல்பிஜி ஐடி ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயலி மற்றும் Aadhaar FaceRD செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இண்டேன் வாடிக்கையாளர்கள் IndianOil ONE செயலி, பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் Hello BPCL செயலி, ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் HP Pay செயலி மூலம் இ-கேஒய்சி செய்யலாம். செயலியில் உள்நுழைந்து, இ-கேஒய்சி பிரிவைத் தேர்வு செய்து ஆதார் முக சரிபார்ப்பை முடிக்க வேண்டும். கடைசி நேர சிக்கல்களைத் தவிர்க்க, வாடிக்கையாளர்கள் உடனடியாக இ-கேஒய்சியை முடித்துக்கொள்வது நல்லது.

Related News

Latest News