இந்திய ரிசர்வ் வங்கி ATM பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைத்து புதிய கட்டணங்களை அறிவித்திருப்பதையடுத்து இந்த மாற்றம், மே மாதம் 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. இந்த மாற்றத்தையடுத்து நிதி பரிவர்த்தனைகளான ATM-ல் இருந்து பணம் எடுப்பதற்கு இரண்டு ரூபாய் கூடுதலாகவும், பணம் அல்லாத பரிவர்த்தனைகளான கணக்கு இருப்பை சரிபார்ப்பது போன்றவற்றுக்கு ஒரு ரூபாய் கூடுதலாகவும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் UPI சேவைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள் என்றாலும் ரொக்க பணம் பல நேரத்தில் பல சந்தர்ப்பங்களில் அவசியப்படுகிறது என்பதால் இப்போதெல்லாம் நமக்கு கைக்கொடுப்பது ATM மெஷின்கள் தான். இந்த நிலையில் ATM கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, மெட்ரோ நகரங்களில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கியைத் தவிர மற்ற வங்கிகளின் ATM-களைப் பயன்படுத்தும் போது மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதே நேரத்தில், மெட்ரோ அல்லாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மாதத்திற்கு மூன்று முறை இலவச பரிவர்த்தனைகள் செய்துக்கொள்ள முடியும் என்ற இந்த விதிமுறையில் எவ்விதமான மாற்றமுமில்லை.
இந்த புதிய மாற்றத்தின் மூலம், குறைவான ATM நெட்வொர்க்குகளைக் கொண்ட சிறிய வங்கிகள் அதிக அளவில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்களுடைய சொந்த வங்கி ATM-களை தவிர பிற வங்கிகளின் ATM-களை பயன்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுவார்கள்.
மேலும் இந்த புதிய கட்டணங்கள் எப்படி, எப்போது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்பது குறித்து வங்கிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில், இடைமாற்றுக் கட்டணங்கள் அதாவது interchange fees திருத்தப்பட்டபோதெல்லாம் வங்கிகள் இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து தான் வாங்கியது. இதேபோல் தான் இந்த முறையும் கட்டணங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.