17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றிருந்தது. செப்டம்பர் மாதம் இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களில் இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் உறவு மேலும் மோசமாகி விட்டதால், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்று விளையாடுவதில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது.
ஏற்கனவே ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட், பாகிஸ்தானில் நடந்த போது இந்திய அணி பாதுகாப்பு அச்சம் காரணமாக அங்கு செல்ல மறுத்தது. இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெரும்பாலான நிர்வாகிகள், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்தியாவும் பொதுவான இடத்தில் போட்டியை நடத்த ஒப்புக் கொண்டது.
இதையடுத்து இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சேர்மன் மொசின் நக்வி தெரிவித்தார்.