தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார். முதற்கட்டமாக ஜெர்மனி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்து இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டன் சென்றடைந்த மு.க.ஸ்டாலினுக்கு தமிழர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீட்டாளர்களையும் தமிழ் மக்களையும் சந்திக்க உள்ளார்.
இந்நிலையில், இங்கிலாந்து பயணம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இங்கிலாந்தில் கால் பதித்தவுடன் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் என குறிப்பிட்டுள்ளார். பல கிலோ மீட்டர் தொலைவு கடந்து பயணம் செய்து வந்த நிலையிலும் தாயகத்தில் இருப்பது போன்று உணர்வதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.