சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தலைமுடியை வெட்டிக்கொண்ட வீரரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க விண்வெளி வீரர் மத்தியாஸ் மௌரர் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ இதை உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 7 வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுசெய்து வருகின்றனர். இவர்கள் 6 மாதக் காலம் அங்கு தங்கியிருந்து ஆய்வுசெய்ய உள்ளனர்.
அவர்கள் தங்கியிருப்பதற்கான அத்தனை வசதிகளும் அங்குள்ள விண்கலத்தில் செய்யப்பட்டுள்ளன. குளிப்பது, பல் துலக்குவது போன்ற அன்றாடச் செயல்களைச் செய்துகொள்ள அங்கு வசதிகள் உள்ளன.
தற்போது, விண்வெளியில் சிகையலங்காரம் செய்துகொள்ளவும் வசதியாகிவிட்டது.
அங்குள்ள விண்வெளி வீரர் மத்தியாஸ் விண்கலத்தைப் பிடித்துக்கொண்டிருக்க, அவருக்கு ட்ரிம்மர்மூலம் தலைமுடியை ட்ரிம் செய்கிறார் இந்திய வம்சாவளி வீரரான ராஜா சாரி. வெட்டப்பட்ட தலைமுடி ட்ரிம்மரால் உறிஞ்சப்பட்டு, தலைமுடிகள் சேகரிக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் போடப்பட்டுள்ளன.
இதுபற்றித் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மத்தியாஸ், விண்வெளி சலூனுக்குள் வாருங்கள். ராஜா சாரி பன்முகத் திறமைகொண்டுள்ளார். அவருக்கு 5 ஸ்டார் கொடுக்கலாம் என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
பூமியில் மிக எளிதாக இருக்கும் செயல்கள் அனைத்தும் விண்வெளியில் கடினமாக இருக்கும். எனினும், அவற்றையெல்லாம் சுலபமாக்கும் முயற்சிகளில் சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தில் உள்ள வீரர்கள் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், விண்வெளியில் உணவு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற செயல்களைச் செய்து விண்வெளியிலும் மனிதர்கள் குடியேறி வாழலாம் என்கிற நம்பிக்கை விதையை விதைத்துள்ளனர்.
புளு ஆரிஜின் என்னும் நிறுவனம் விண்வெளிக்கு சுற்றுலாவும் அழைத்துச்சென்றது. அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் விண்வெளிக்கு கூரியர்மூலம் உணவை அனுப்பி சாதனை படைத்தது உபேர் ஈட்ஸ் நிறுவனம்.
இந்த நிலையில், விண்வெளியில் சிகையலங்காரம் செய்துகொள்ளும் வசதியும் வந்துவிட்டது சாமானியர்களை மலைக்க வைத்துள்ளது.
இனிமே தலைமுடி வெட்டிக்க விண்வெளிக்கு போகலாம்… யாரெல்லாம் வாரீங்க?