இந்தியாவில் ஆயுதக்குழுக்களுக்கு பயிற்சி அளித்த குற்றச்சாட்டின் கீழ் முதல் முறையாக வெளிநாட்டைச்சேர்ந்த 7 நபர்கள் தேசிய புலனாய்வு முகமையால் 14-03-2026 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு பிறகு மத்திய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமுகமையாக,மத்திய அரசால் NIA உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு; மாநிலத்தின் பாதுகாப்பு,இந்தியாவைப் பாதிக்கும் குற்றங்களை விசாரிக்கவும், அக்குற்றங்கள் மீது வழக்குத் தொடரவும் தேசிய புலனாய்வு முகமைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
எவரையும் கைது செய்யும் அதிகாரம் உலகத்தரம் வாய்ந்த புலனாய்வு ஏஜென்சியாக NIA-வை மாற்றும் நோக்கத்துடன்,அதன் திறனை மேம்படுத்துவதற்காக கூடுதல் அதிகாரம் வழங்கி 2019-ல் சட்டத்திருத்தம் ஒன்றையும் கொண்டுவந்தது மத்திய அரசு.
அதன்படி
(i). இந்தியக் குடிமக்கள் அல்லது இந்திய நலன்கள் சார்ந்த, இந்தியாவிற்கு வெளியே இழைக்கப்படும் அட்டவணைப்படுத்தப்பட்ட குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு NIA-விற்கு வழங்கியுள்ளது.
(ii). வெடிபொருள் சட்டம், 1908′, மனிதக் கடத்தல், இணையப் பயங்கரவாதம் மற்றும் ‘ஆயுதச் சட்டம், 1959’ ஆகியவை தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் வகையிலும் NIA-வின் அதிகார வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
(iii). நாட்டின் பல்வேறு பகுதிகளில் 21 கிளை அலுவலகங்களையும்,2 மண்டல அலுவலகங்களையும் (கவுகாத்தி மற்றும் ஜம்முவில்), புது தில்லியில் தலைமையகத்தையும் நிறுவியதன் மூலம், NIA-வின் செயல் பரப்பு இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அதிகார வரம்புகளை உள்ளடக்கிய விசாரணைகளைக் கையாள்வதில் இந்தியாவின் திறனை நிறுவனமயமாக்கும்வகையில், 2024-ஆம் ஆண்டில் NIA-விற்குள் ஒரு பிரத்யேக (Foreign Investigation Request Unit (FIRU) வெளிநாட்டு விசாரணை கோரிக்கை பிரிவும் நிறுவப்பட்டுள்ளது.
கைது செய்ய உதவிய Foreign Investigation Request Unit
மியான்மரில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கு (Ethnic Armed Groups) ஆயுதப்பயிற்சி தருவதற்காக சிலர் இந்தியா மார்க்கமாக மியான்மர் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து இந்த ஆப்ரேஷன் NIA-வால் மேற்கொள்ளப்பட்டது
13-03-2026 அன்று சுற்றுலா விசாவின் மூலமாக கொல்கொத்தா விமானநிலையத்திற்கு வந்த Matthew Van Dyke
லக்னோ விமான நிலையத்தில் இறங்கிய Hurba Petro,Slyviak Taras, Ivan Sukmanovskyi எனும் மூன்று உக்ரேனியர்கள்.
டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய Stefankiv Marian, Honcharuk Maksim, Kaminskyi Viktor எனும் மூன்று உக்ரேனியர்கள் என மொத்தம் ஏழு நபர்களை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
02-12-2025 அன்று மக்களவையில் உள்துறை அமைச்சகம் கூறியுள்ள பதிலின்படி, இந்தியாவில் தேசிய புலனாய்வு முகமை தொடங்கப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மொத்தம் 692 வழக்குகள். அதில் 172 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்ற நிரூபண சதவிகிதம் 92.44% என்கிறது உள்துறை அமைச்சகம்.

இந்தியாவின் ஆயுதக்குழுவுக்கு அந்நிய சக்திகள் உதவி
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 23 அமைப்புக்களை சட்டவிரோத அமைப்புக்கள் என உள்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. அதில் ஒரு அமைப்புக்கூட மிசோராமில் இருந்து இயங்குவதாக மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. ஆனால், கைது செய்யப்பட்டுள்ள 7 வெளிநாட்டவரும் மிசோரம் மாநிலத்தையே மியான்மருக்குள் நுழையும் வழித்தடமாக பயன்படுத்தி இந்தியாவின் ஆயுதக்குழுக்களுக்கு பயிற்சியளித்துள்ளனர் என்று தேசிய புலனாய்வு முகாமையால் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்து மிசோரம் மார்க்கமாக மியான்மருக்கு கடத்தியுள்ளதாகவும் NIA குற்றம்சாட்டியுள்ளது.

பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நிகழ்ந்த ஆயுதக்கடத்தல்-ஆயுதப்பயிற்சி
இந்தியாவின் Foreigners (Protected Areas) Order, 1958-ன் படி மணிப்பூர்,மிசோரம் மற்றும் நாகலாந்து ஆகிய மூன்று மாநிலங்களும் முழுமையாக வெளிநாட்டவர் நுழைய தடை செய்யப்பட்டவை. ஆனால்,சுற்றுலா மேம்பாட்டிற்காக 30-10-2010 அன்று பிறப்பிக்கப்பட்ட Circular No-393-ன் படி முறைப்படி விசா அனுமதி பெற்று வெளிநாட்டவர்கள் நுழைய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
சீனா,பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் ஆகிய 3 நாடுகளைச்சேர்த்தவர்கள் மட்டும் கட்டாயம் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். இதர நாட்டவர்கள் Foreigners Registration Office-ல் அனுமதி பெற்று பயணிக்கலாம் என்று உள்துறை அமைச்சகத்தின் Foreigners Division ,16-12-2022 அன்று Circular No-579 ல் கூறியுள்ளது. இந்த உத்தரவு 2027 ம் ஆண்டுவரை அமுலில் இருக்கும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை கூறுகிறது.
தேசிய புலனாய்வு முகமை தொடங்கப்பட்ட தினத்தில் இருந்து ஆயுதக்கடத்தல்,ஆயுதப்பயிற்சி கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டவர்கள் இதுவரை உள்நாட்டில் கைது செய்யப்பட்டதில்லை. அதுவும் சுற்றுலா விசாவில் வந்து,தரை மார்க்கமாகவே ஆயுதங்களை கடத்தி மிசோரம் மாநிலத்தை இடைவழியாக பயன்படுத்தி இந்தியா மற்றும் மியான்மர் மாநிலத்தில் உள்ள குழுக்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஒரு கைது சம்பவம் வரலாற்றிலேயே நடந்தது இல்லை.

பாதுகாப்பில் கோட்டைவிட்டதா உள்துறை அமைச்சகம் ?
17-04-2024 அன்று உள்துறை அமைச்சகத்தின் Foreigners Division சார்பில் மணிப்பூர்,மிசோரம் மற்றும் நாகலாந்து மாநிலங்களின் தலைமைச்செயலாளர்களுக்கு Circular No-602-ன் மூலமாக நினைவூட்டல் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில் 16-12-2022 அன்று பிறப்பிக்கப்பட்ட Circular No-579-ன் படி வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வருகை மற்றும் சுற்றுலா அனுமதி வழங்குவதை கவனத்துடன் அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாட்டவர்கள் வருகை மற்றும் ஊடுருவல் மிகவும் அச்சறுத்தல் மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளதென்று மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சர் Lalduhoma 11-03-2025 அன்று அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.


மியான்மருக்குப் பயணம் செய்யும் வெளிநாட்டினரால், மிசோரம் மாநிலம் ஒரு இடைவழிப் பாதையாக ரகசியமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், 2024 ம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 2,000 வெளிநாட்டினர் மிசோரத்திற்கு வருகை தந்ததாகவும், அவர்களில் பலர் சுற்றுலாப் பயணிகளாக வரவில்லை என்பதோடு, யாருக்கும் தெரியாமல் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
அதோடு நிற்கவில்லை, சில வெளிநாட்டினர் இந்தியா-மியான்மர் எல்லையைக் கடந்து, அண்டை நாடான மியான்மரின் ‘சின் மலைப்பகுதி’ க்குள் (Chin Hills) நுழைந்து, அங்குள்ள ஆயுதக்குழுக்களுக்கு ராணுவப் பயிற்சி அளிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சட்டவிரோதமாக வெளிநாட்டினர் மிசோரம் மாநிலத்திற்குள் நுழைந்தனரா?
இந்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள 2025-ம் ஆண்டு ஆண்டறிக்கையின்படி 2024-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 99,51,722. அதேபோல உள்துறை அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு 16-03-2026 அன்று மாநிலங்களவையில் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதில், வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த எண்ணிக்கை விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிக்கிம் உட்பட பிரதேசங்களுக்கு 2024-ம் ஆண்டில் 2.44 லட்சம் வெளிநாட்டவர் வந்து சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதில்,தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் மிஸோரம் மாநிலத்திற்கு 5 ஆயிரம் வெளிநாட்டவர் பயணித்துள்ளனர்.
கவனிக்கவும்… Bureau of Immigration-ல் அனுமதி பெற்ற பிறகே அயல்நாட்டவர் இந்தியாவிற்குள் நுழைய முடியும். ஆனால், அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலத்திற்குள் நுழைந்த வெளிநாட்டவர் குறித்த தகவல்கள் திருத்தப்பட்டுள்ளதை உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை ஒப்புக்கொள்கிறது. அப்படியென்றால், வெளிநாட்டினர் வருகை குறித்த விபரங்களை Bureau of Immigration முறையாக கண்காணிப்பதில்லையா?


மிசோரம் மாநில முதலமைச்சரின் குற்றசாட்டை உறுதிப்படுத்திய NIA
பாதுகாக்கப்பட்ட பகுதி,அனுமதி பெறாமல் நுழையவே முடியாத மாநிலத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த அறிக்கை திருத்தப்பட்டதற்கு என்ன காரணம் ?
உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையோடு ஒப்பிட்டால் 2000 வெளிநாட்டினர் அனுமதியின்றி வந்து சென்றதாக மிசோரம் மாநில முதலமைச்சர் கூறிய குற்றச்சாட்டு உண்மையோ என்ற எண்ணமே எழுகிறது.
மியான்மருடன் இந்தியா 1643 கிலோமீட்டர் நீளமுள்ள நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அதில் சுமார் 510 கி.மீ மிசோரமும், 398 கி.மீ மணிப்பூரும்,நாகாலாந்து 215 கி.மீ, அருணாச்சல பிரதேசம் 520 கிலோ மீட்டரும் பகிர்ந்துகொள்கிறது.
இதில், மணிப்பூர் மற்றும் மிசோரம் என இரண்டு மாநிலங்களும் பகிர்ந்துகொள்ளும் மியான்மரின் எல்லை மாநிலமான சின் மலைப்பகுதியில் தான் ஆயுதப்பயிற்சி அந்நிய சக்திகளால் வழங்கப்படுவதாக மிசோரம் முதலமைச்சர் லால்டுஹோமா குற்றம் சாட்டியுள்ளார்.
7 வெளிநாட்டவர்களை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து மிசோரம் மாநில முதலமைச்சர் 11-03-2025 அன்று அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்த குற்றசாட்டை உண்மை என ஊர்ஜிதப்படுத்தியுள்ளது தேசியப்புலனாய்வு முகமை.
இதில் மிகவும் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்தியாவின் உள்துறை அமைச்சகம் தடை செய்யப்பட்ட அமைப்புக்களாக அறிவித்துள்ள 23-ல் ஒரு அமைப்பு கூட மிசோரம் மாநிலத்தில் இயங்கி வரவில்லை.
இந்தியாவில் உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டுள்ள 23 அமைப்புகள்


அப்படியென்றால், இந்தியாவின் RAW மற்றும் இதர மத்திய புலனாய்வு ஏஜென்சிகள் கண்டறியாத ஆயுதக்குழு புதிதாக தயாராகி வருகிறதா என்ற கேள்வியே எழுகிறது.
கூடுதலாக மிசோரம் மாநில முதலமைச்சர் முன்வைத்த குற்றசாட்டை உள்துறை அமைச்சகம் கொஞ்சம்கூட பொருட்படுத்தவில்லை என்பதும் ஊர்ஜிதமாகிறது.
ஐரோப்பாவில் இருந்து ஆயுதங்கள், ட்ரோன்களை இறக்குமதி செய்ய உதவியது யார்? வாகனங்கள் மூலமாக மியான்மருக்கு கொண்டு செல்ல உதவியது யார்? எல்லைப்பாதுகாப்பு,சோதனைச்சாவடிகள் என அனைத்தையும் கடந்து மியான்மருக்குள் வெளிநாட்டவர்கள் நுழைந்தது எப்படி? என எண்ணற்ற கேள்விகளை தேசியப்புலனாய்வு முகமை நடத்தியுள்ள இந்த ஆப்ரேஷன் எழுப்பியுள்ளது.
உள்நாட்டின் பாதுகாப்பு குறித்த இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் மக்களுக்கு உரிய பதிலையும், விளக்கத்தையும் தரவேண்டியது அவசர அவசியம்.
B.R அரவிந்தாக்ஷன்
