காலையில் எழுந்தவுடன் பால், சர்க்கரை இல்லாத ஒரு கப் பிளாக் காபி குடித்தால்தான் நாள் தொடங்கும் என்று நினைப்பவர்கள் பலர் உள்ளனர். உடல் எடை குறையும், உடலுக்கு நல்லது என்ற நம்பிக்கையுடனே பலரும் இதை தினசரி பழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிப்பது உடலுக்கு நன்மையா? அல்லது தீங்கா? என்பதைக் குறித்து சமீபத்திய ஆய்வுகள் சில முக்கிய எச்சரிக்கைகளை முன்வைக்கின்றன.
பிளாக் காபி தன்னிச்சையாக தீங்கு விளைவிக்கும் பானம் அல்ல. ஆனால் அதை எப்போது, எப்படி குடிக்கிறோம் என்பதே முக்கியமான விஷயமாகும். குறிப்பாக, காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பது வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
காலை நேரத்தில் வயிற்றில் உணவு இல்லாத நிலையில் காபி குடிக்கும்போது, அது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கிறது. இதனால் வயிற்றுச் சுவர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை தொடர்ந்து அலட்சியப்படுத்தினால், எதிர்காலத்தில் அல்சர் போன்ற கடுமையான பாதிப்புகள் வரக்கூடும்.
பலர், “காபி குடித்தாலும் எனக்கு தூக்கம் நன்றாகவே வருகிறது” என்று நினைக்கலாம். ஆனால் காபியில் உள்ள கஃபைன் காரணமாக ஆழ்ந்த உறக்கம் பாதிக்கப்படுகிறது. தூங்கும் நேரம் போதுமானதாக இருந்தாலும், காலை எழும்போது உடல் சோர்வாகவும் புத்துணர்ச்சி இல்லாமலும் உணரப்படலாம். மேலும், கஃபைன் நரம்பு மண்டலத்தை தூண்டுவதால், தேவையற்ற பதற்றம், கை நடுக்கம், இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலிலும் காபி பாதிப்பை ஏற்படுத்துகிறது. உணவு சாப்பிட்ட உடனே காபி குடிப்பதால், உணவில் உள்ள இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகளை உடல் சரியாக உறிஞ்ச முடியாமல் தடுக்கப்படுகிறது. இதனால் ரத்தசோகை ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். குறிப்பாக பெண்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
அதேபோல், அதிக அளவில் காபி குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையும் நிலை ஏற்படலாம். இதன் விளைவாக தலைவலி, தோல் வறட்சி போன்ற பிரச்சினைகள் உருவாகும்.
இதனால், உணவியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், பிளாக் காபியை முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதை வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. உணவுக்கும் காபிக்கும் இடையில் குறைந்தது ஒரு இடைவெளி வைக்க வேண்டும். மேலும், காபி குடித்த பிறகு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
