மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டிகவுன்சில் கூட்டத்தில் புதிய ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட வரி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய ஜிஎஸ்டி கட்டுப்பாடு செப்டம்பர் 22 முதல் அமலில் வரும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி, 1,200 சிசி மதிப்புக்கு குறைவான எஞ்சின் திறன் மற்றும் 4,000 மிமீ நீளம் கொண்ட பெட்ரோல், எல்பிஜி, சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் 1,500 சிசி மற்றும் 4,000 மிமீ நீளம் கொண்ட டீசல் வாகனங்கள் 18% ஜிஎஸ்டி வரி அளவில் வருவதாக மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம், 1,200 சிசிக்கு மேல் திறன் மற்றும் 4,000 மிமீக்கும் மேலான நீளம் கொண்ட வாகனங்களுக்கு 40% வரி விதிக்கப்படும்.
தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதலாவதாக தனது வாகனங்களின் விலைகளை குறைத்துள்ளது. டியோகோ, டிகோர், ஆல்ட்ரோஸ், பன்ச், ஹாரியர், கர்வ், சபாரி மற்றும் நெக்சான் போன்ற வாகனங்களுக்கான விலையை ரூ.65,000 முதல் ரூ.1,55,000 வரை குறைத்துள்ளது.
இதே போல மஹிந்திரா, மாருதி சுசுகி, பஜாஜ், ஹோண்டா போன்ற மற்ற நிறுவனங்களும் உள்நாட்டில் விலை குறைப்பை அறிவித்து உள்ளனர். இதன் மூலம் வாகன விற்பனை மேல் வளர்ச்சி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.