சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்னும் சில நாட்களில் 44 வயதை எட்டுகிறார். அறுவைசிகிச்சை மேற்கொண்டு இருப்பதால், போட்டியின்போது கால்களை பெரிதாக நகர்த்த முடியாமல் அவதிப்படுகிறார். உடல்நிலை பெரிதாக ஒத்துழைக்கவில்லை என்றாலும் விக்கெட் கீப்பர், கேப்டன், பேட்ஸ்மேன் என 3 பணிகளை செய்ய வேண்டிய கட்டாயம்.
அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்ட ருதுராஜ், கேப்டன் பொறுப்பை சரியாக கையாளவில்லை. எனவே நெக்ஸ்ட் கேப்டனை தேட வேண்டிய நிலையில் அணி இருக்கிறது. சரியாக இந்த நேரம் பார்த்து மற்றொரு IPL அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், நிர்வாகத்துடனான மனக்கசப்பால் ராஜஸ்தானை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை.
இதைப்பார்த்த சென்னை தோனி இடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று, Trading முறையில் சஞ்சு சாம்சனை வாங்கிட தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகின்றன. இதை சென்னை அணி நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. பதிலுக்கு ருதுராஜை கேட்பதால் முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சஞ்சு சாம்சனிடம் பத்திரிகையாளர்கள், ” CSK அணிக்கு வரப்போறீங்களா? கேள்வி எழுப்ப, அவர் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு சென்று விட்டாராம். என்றாலும் ஜியோ ஹாட்ஸ்டாரின் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில், சாம்சன் இதுகுறித்து மறைமுகமாக பேசியிருக்கிறார்.
அதில், ” எல்லா இளம்வீரர்களையும் போல எனக்கும், தோனியை சுற்றியே இருக்க வேண்டும் என்பது தான் ஆசை. சென்னைக்கு எதிராக ஒவ்வொரு முறை விளையாடும்போதும் போட்டிக்கு பின்னர் தோனியுடன் அமர்ந்து பேச விரும்புவேன். அவர் எப்படி விஷயங்களை செய்கிறார் என்று கேட்க ஆசைப்படுவேன், ” என ஓபனாக பேசியிருக்கிறார்.
இதன் மூலம் சென்னை அணிக்காக விளையாடுவது, சாம்சனின் நீண்ட நாள் கனவாகவே இருந்தது தெரிய வந்துள்ளது. சாம்சன் கேரளாவை சேர்ந்தவர் என்பதால், சென்னை ரசிகர்கள் அவரை எளிதாக ஏற்றுக் கொள்வார்கள் என்று CSK நினைக்கிறதாம். இதுவும் சாம்சனின் சென்னை வருகைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.