இந்தியாவில் தங்கத்தின் மீது மக்களுக்கு உள்ள ஈர்ப்பு உலக நாடுகளை விட அதிகமாக உள்ளது. தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் மக்கள் அதிகளவில் அதை வாங்கி வருகின்றனர். குறிப்பாக திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் திருவிழாக்களில் தங்கம் வாங்குதல் அல்லது பரிசளித்தல் பாரம்பரியமாக தொடர்கிறது.
இந்த நிலைமையில், கடந்த ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் சுமார் 60,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அது பின்னர் 1.34 லட்சம் ரூபாயை எட்டி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக, பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் நாணய மதிப்பை உயர்த்துவதற்காக பெருமளவில் தங்கத்தை வாங்கியதே கூறப்படுகிறது.
அதே நேரத்தில், வளைகுடா பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் பதற்றம் மற்றும் போர் சூழ்நிலை காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்கள் திடீரென கச்சா எண்ணெய் மீது கவனம் செலுத்தியதால் தங்கத்தின் விலை ஒரு கட்டத்தில் குறைந்தது. 1.34 லட்சம் ரூபாயில் இருந்த தங்கம் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைந்தாலும், சில நாட்களிலேயே மீண்டும் உயர்வு காணப்பட்டது.
தற்போது கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. இன்று கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 14,100 ரூபாயாகவும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,12,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் குறைந்து, கிராமுக்கு 5 ரூபாய் வீழ்ச்சி அடைந்து 265 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.
