தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாகவே அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி மாற்றங்கள், இப்போது உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாக வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய பூகம்பத்தையே கிளப்பியுள்ளது.
கடந்த மே மாதம் வெளியான 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், 108 இடங்களைப் பிடித்து தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அப்போதே திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் விரிசல் விழத் தொடங்கிவிட்டது. முதலில் காங்கிரஸ் விலகிய நிலையில், இப்போது இரண்டு நாட்கள் தீவிர ஆலோசனைக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியும் தனது முடிவை அறிவித்துள்ளது. “தற்போதைய அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் எங்களால் தொடர முடியாது” என்று வீரபாண்டியன் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், இப்போது ஆட்சி அமைத்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “நாங்கள் ஆட்சியிலுள்ள கட்சியுடன் இப்போது கூட்டணியில் இல்லை, ஆனால் ஜனநாயக சக்திகளின் வெற்றிக்காக வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம்” என்று கூறிய அவர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளையும் தங்களின் நட்பு சக்திகளாகவே பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேருவின் ஆட்சிக் காலத்தைப் புகழ்ந்து பேசிய வீரபாண்டியன், இன்றைய அரசு விக்ரம் சாராபாய் மற்றும் அப்துல் கலாம் போன்ற மேதைகளை உருவாக்கிய நேருவின் தொலைநோக்குப் பார்வையை மறந்துவிட்டு அவரை வசைபாடுவது சரியல்ல என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், புதிய முதல்வர் விஜய்க்கு ஒரு முக்கியமான கோரிக்கையையும் வைத்துள்ளார். “ஊடகங்கள் ஜனநாயகத்தின் கண்கள், எனவே முதல்வர் அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளை எளிதாகக் கடந்து செல்ல முடியாது என்று குறிப்பிட்ட வீரபாண்டியன், வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் யாருடன் கூட்டணி என்பதை அந்த நேரத்துச் சூழலைப் பொறுத்து முடிவு செய்வோம் என அதிரடியாகக் கூறியுள்ளார். உழைக்கும் மக்கள் இருக்கும் வரை கம்யூனிஸ்ட்களை யாராலும் தனிமைப்படுத்த முடியாது என்ற அவரது கர்ஜனை, வரும் நாட்களில் தமிழக அரசியலில் இன்னும் பல மாற்றங்கள் நிகழும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. திமுக கூட்டணியின் இந்தச் சரிவு, வரப்போகும் தேர்தல்களில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
