கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்திற்கு விசிக சார்பில் ரூ.50,000 நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் திருமாவளவன் சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டாலும், அண்ணாமலை தான் தான் தலைவர் என்ற மனநிலையில் பேசுகிறார்.
சென்னையில் ஸ்கூட்டர் மீது எனது வண்டி மோதியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கும் அண்ணாமலைக்கும் ஏதோ தொடர்பு உள்ளது. அண்ணாமலைக்கு மட்டும் உடனடியாக செய்தி எப்படி தெரிகிறது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என கூறினார்.
