ஆந்திராவில் 3வதாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு அளிக்கப் போவதாக அம்மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி., அறிவித்துள்ளார். பெண் குழந்தை பெற்றால் ரூ.50 ஆயிரமும், ஆண் குழந்தை பெற்றால் பசு மாடும் அளிப்பதாக கூறியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த விஜயநகரம் தொகுதி எம்.பி., காளிசெட்டி அப்பலநாயுடு , பெண்கள் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு வழங்கப்படும். 3வதாக பெண் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், ஆண் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு பசு மாடும் பரிசாக வழங்குவேன். நிதியுதவியை எனது சம்பளத்தில் இருந்து வழங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இது தொடர்பாக கூறுகையில், “தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்” என கூறியிருந்தார்.