இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு, இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் பல்வேறு வரலாற்று சாதனைகளை, படைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதுகுறித்து பார்க்கலாம்.
ரோஹித் சர்மா டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, 25 வயது கில்லுக்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்திய பிளேயிங் லெவனில் கூட, தன்னுடைய வாய்ப்பினை உறுதி செய்யாத கில்லுக்கு கேப்டன் பதவியா? என கடும் விமர்சனங்களும் எழுந்தன.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி 4 சதங்களுடன் 722 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக, 700+ ரன்கள் எடுத்த முதல் ஆசிய பேட்டர் என்னும் சாதனையை செய்துள்ளார்.
ஓவலில் நடைபெறும் 5வது டெஸ்டில் அபாரமாக ஆடினால், கில்லால் பல வரலாற்று சாதனைகளை படைக்க முடியும். 774 ரன்களுடன் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரராக சுனில் கவாஸ்கர் உள்ளார். கில் இன்னும் 53 ரன்கள் எடுத்தால், அந்த சாதனையை உடைத்து வரலாறு படைக்க முடியும்.
அதேபோல் 78 ரன்களை சேர்த்தால், ஒரு டெஸ்ட் தொடரில் 800 ரன்களை விளாசிய முதல் ஆசிய பேட்ஸ்மேன் என்ற, சாதனையை படைக்க முடியும். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில், டான் பிராட்மேன் 810 ரன்களை விளாசியதே சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை தகர்க்க சுப்மன் கில் 89 ரன்கள் சேர்க்க வேண்டும்.
இதன் மூலமாக 88 ஆண்டுகளாக நீடித்து வரும் சாதனையை முறியடிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் 5வது டெஸ்ட் போட்டியில் கில் சதமடித்தால், ஒரு டெஸ்ட் தொடரில் 5 சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும். தற்போது 4 சதங்களுடன் விராட் கோலி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஓவல் மைதானத்தில் இதுவரை 9 இந்திய வீரர்கள் சதம் அடித்துள்ளனர். ஆனால் அதில் யாரும் கேப்டன்கள் இல்லை. கில் சதமடித்தால், ஓவலில் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை படைக்க முடியும். 5 சதங்களை இந்த டெஸ்ட் தொடரில் அடிப்பதன் மூலமாக, சுப்மன் கில்லால் பிராட்மேனின் சாதனையையும் சமன் செய்ய முடியும்.