ஒரு சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட அரசாங்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகின்றது. அவற்றை உரியவர்களுக்கு சென்றடையச் செய்வதில் ரேஷன் அட்டை ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் ரேஷன் கார்டு உணவுப் பொருட்கள் விநியோகத்திற்கான அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கான ஆவணமாகவும் இது இருக்கிறது. இந்நிலையில், ரேஷன் அட்டை அடிப்படையில் கிடைக்கக்கூடிய சில திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
குடும்ப அட்டையின் மிக முக்கிய நோக்கம் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அடிப்படையான உணவுப் பொருட்களை மானிய விலையில் அல்லது இலவசமாக வழங்குவது தான். அதனை தாண்டி தமிழக அரசின் முக்கியத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை போன்றவற்றை பெறுவதற்கும் முக்கிய ஆவணமாக இருக்கிறது. இத்திட்டங்கள், தகுதியுள்ள பயனாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டதுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற வழி செய்கிறது. இதற்கு ரேஷன் அட்டை, குறிப்பாக அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை வைத்திருப்பது அடிப்படைத் தேவையாக இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பண்டிகை நேரத்தில் தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவதற்கும் புயல் போன்ற இயற்கை இடர்களின்போது வழங்கப்படும் நிவாரண உதவிகள் மற்றும் நிதி உதவிகளைப் பெறவும் ரேஷன் அட்டை முக்கியமான அடையாளச் சான்றாக இருக்கிறது.
ஆனாலும் குறிப்பிட்ட திட்டங்களுக்கான தகுதிகள் தனி நபருக்கோ அல்லது அந்த குடும்பத்துக்கோ இருப்பதும் அவசியம்.