சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6 இல் தூய்மை பணிகளுக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என். நேரு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இதனையடுத்து நேற்றிரவு ரிப்பன் மாளிகை முன்பு குவிந்த காவலர்கள், தூய்மை பணியாளர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். போராட்ட களத்தில் இருந்து விலகி செல்ல மறுத்தவர்களை குண்டுக்கட்டாக காவலர்கள் தூக்கி சென்றனர். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அடையாறு, கிண்டி, சைதாபேட்டை, வேளச்சேரியில் உள்ள சமூக நல கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 12 மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்த 922 தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.