மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் அம்மா பூங்கா சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து தர குறைவாக பேசுவது இன்று நேற்றல்ல அவருக்கு வாடிக்கையான ஒன்றுதான். பொன்முடி மீதான குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சருக்கு தாமதமாகவே தெரிய வந்திருக்கிறது. இதுபோல மக்கள் பிரச்சனைகளையும் லேட்டாகவே புரிந்து கொள்கிறார்.
தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டியது.தேர்தல் நேரத்தில் தான் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த அணியில் இருக்கும் என்பது தெரியும். அதனை எங்கள் பொதுச்செயலாளர் உறுதியாக வலுவாக முடிவெடுப்பார்.
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திப்பதாக இருந்தால் முன்கூட்டியே எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார். ஊடகங்கள், கற்பனை கதைகள் எழுத தேவையில்லை.
ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாய கூடியவர். ஜெயலலிதா சிங்கப்பெண் என்றால் எடப்பாடி பழனிசாமி சிங்கக்குட்டி. எனவே அதி.மு.க. கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். நல்ல ஒரு கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைப்பார். அது வெற்றி கூட்டணியாக இருக்கும் என அவர் கூறினார்.