பான் கார்டுக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் மட்டும் போதாது – மத்திய அரசின் திடீர் அறிவிப்பு

பான் கார்டு விண்ணப்பிக்கும் நடைமுறையில் மத்திய அரசு புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. 2026 ஏப்ரல் 1 முதல், பான் கார்டு பெற ஆதார் அட்டை மட்டும் போதுமானதாக இருக்காது. அதனுடன் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் கூடுதல் ஆவணமும் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

இதுவரை, பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால் புதிய விதிமுறையின்படி, ஏப்ரல் 1, 2026 முதல் ஆதார் அட்டையுடன் பிறந்த தேதிக்கான ஆதார ஆவணமும் இணைக்க வேண்டும்.

அதே நேரத்தில், மார்ச் 31, 2026 வரை விண்ணப்பிக்கும் நபர்களுக்கு பழைய நடைமுறை தொடரும். அதாவது, அந்த தேதிவரை ஆதார் அட்டை மட்டும் கொண்டு பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

புதிய விதிப்படி, பிறந்த தேதியை நிரூபிக்க கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்:

  • பிறப்புச் சான்றிதழ்
  • வாக்காளர் அடையாள அட்டை
  • பாஸ்போர்ட்
  • ஓட்டுநர் உரிமம்
  • 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்விச் சான்றிதழ்கள் (மார்க் சீட் / டி.சி)

பான் கார்டு என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் முக்கியமான அடையாள ஆவணம். இது வருமான வரி தாக்கல் செய்வதற்கு, வங்கி கணக்கு தொடங்குவதற்கு, பெரிய தொகை பண பரிவர்த்தனைகளுக்கு, மற்றும் நிலம் அல்லது வீடு வாங்கும்/விற்கும் செயல்பாடுகளுக்கு அவசியமாகும்.

இந்த 10 இலக்கங்களைக் கொண்ட நிரந்தர கணக்கு எண் (PAN), வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற முடியும்.

Related News

Latest News